வீரகனூரில் பலத்த மழை-சூறைக்காற்றில் புளிய மரம் முறிந்து விழுந்தது
வீரகனூரில் நீண்டநாள்களுக்கு பிறகு மழை பெய்ததால், கோடைவெயிலில் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீரகனூரில் நீண்டநாள்களுக்கு பிறகு மழை பெய்ததால், கோடைவெயிலில் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுமார் ஒருமணிநேரம், நல்ல மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்துவந்தது. இந்நிலையில் கடந்தவாரத்தில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
ஆனால் சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் அக்னி நட்சத்திர வெயில் காரணமாக பயிர்கள் கருகி கால்நடைகளுக்கு கூட உணவு இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமையன்று பிற்பகல் 3 மணியளவில் வீரகனூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. இதனால் கடந்த பல நாள்களாக கோடைவெயிலில், அனல்காற்றில் தவித்துவந்த பொதுமக்கள், கோடைமழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையின்போது, அடித்த சூறைக்காற்றுக்கு, வீரகனூரிலேயே , வீரகனூர்}பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் மிகவும்பழைமையான புளிய மரம் ஒன்று,வேரோடு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், போக்குவரத்து சீரானது.இருப்பினும் மழை,மக்களை குளிர்வித்துள்ளது.