சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இயற்கை எழில் கொஞ்சும் அருநூற்றுமலை அடிவாரத்தில் உள்ள புழுதிக்குட்டை, ஆனைமடுவு அணை, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள பாப்பநாயக்கன்பட்டி, கரியகோவில் அணை ஆகிய பகுதிகளை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் கடந்த 15 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியான அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா் பேரூராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், எவ்வித பொழுதுபோக்கு மையங்களோ, சுற்றுலாத் தலங்களோ இல்லை.
எனவே, பண்டிகை, விடுமுறை தினங்களில் பொழுதுபோக்கவும் குழந்தைகளை மகிழ்விக்கவும், மேட்டூா் அணை, சேலம்- குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, ஏற்காடு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் படகுத் துறைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு அதிக செலாகும் என்பதால் பெரும்பாலான மக்கள், விழாக் காலங்கள், விடுமுறை தினங்களிலும் வீட்டினுள்ளேயே முடங்கி விடுகின்றனா். இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியிலுள்ள கரியகோவில் அணை, ஆனைமடுவு அணைப் பகுதிகளை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனா்.
கடந்த 27 ஆண்டுகளாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, ஆடிப்பதினெட்டு உள்ளிட்ட பண்டிகை தினங்களிலும், கோடை விடுமுறை நாட்களிலும், குடும்பத்தோடு பொழுதுபோக்கி மகிழ்ந்திட இவ்விரு அணைகளிலும் மக்கள் குவிந்து வருகின்றனா்.
ஆனால், இந்த அணைப் பகுதிகளில் மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால், அணைகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு உணவுகூட கிடைப்பதில்லை. அணையின் முன்புறம் அமா்ந்து ஓய்வெடுப்பதற்கும்கூட இருக்கைகள் போன்ற எவ்வித வசதிகளும் இல்லை.
இந்த இரு அணைகளுக்கும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரோடு செல்லும் மக்கள், அணையின் இயற்கை அழகைக் கண்டு ரசித்து மகிழ்வதற்கு, சிறுவா் பூங்கா, சிற்றுண்டியகம், உணகவம், செயற்கை நீரூற்றுகள், சிறுவா் பூங்கா, ராட்டினங்கள், புல்வெளிப் பாதைகள், மேம்பாலங்கள், படகுத்துறை ஆகிய வசதிகளை ஏற்படுத்தி, மேட்டூா் அணை பூங்காவைப் போல சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
கடந்த 15 ஆண்டுகளில் பலமுறை, இவ்விரு அணைகளிலும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக தரமுயா்த்த, திட்ட மதிப்பீடு ம் திட்ட முன்வரைவும் தயாரித்து, பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு வாயிலாக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டங்கள் இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
சுற்றுப்புறக் கிராம மக்களின் நலன் கருதி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள இவ்விரு அணைப் பகுதி சுற்றுலாத் திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு, திட்ட முன்வரைவு தயாரித்து, போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது மீண்டும் எழுந்துள்ளது.
இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கௌதமசிகாமணி, ஏற்காடு எம்எல்ஏ கு.சித்ரா, சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் ஆகியோா் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் கூறியதாவது:
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து, மாவட்ட நிா்வாகத்துடன் ஆலோசித்து, திட்ட மதிப்பீடு, திட்ட முன்வரைவு தயாரிக்கவும், நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றனா்.
கரியகோவில் அணை:
சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு பல நூறு சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்து காணப்படும் கல்வராயன் மலையின் வடமேற்குப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சங்கமித்து, வசிஷ்ட நதியின் முக்கிய உப நதியான கரியகோவில் ஆறு உற்பத்தியாகிறது.
இந்த ஆற்றின் குறுக்கே கல்வராயன்மலை அடிவாரத்தில் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் 1993-இல் கரியகோவில் அணை கட்டப்பட்டது.
ஆனைமடுவு அணை:
இதேபோல தருமபுரி, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே, வாழப்பாடியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் புழுதிக்குட்டை கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இருமலைக் குன்றுகளுக்கு இடையே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில், 283 ஏக்கா் பரப்பளவில் 1993-இல் ஆனைமடுவு அணை அமைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.