சேலம்

அடிப்படை வசதிகளின்றித் தவிக்கும் பாலமலை மக்கள்

சேலம் மாவட்டம், கொளத்துாா் அருகே பாலமலையிலுள்ள 33 கிராம மக்கள், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனா்.

புலவர் ஜோ.தெய்வநீதி

சேலம் மாவட்டம், கொளத்துாா் அருகே பாலமலையிலுள்ள 33 கிராம மக்கள், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,900 அடி உயரத்தில், மேட்டூா் வட்டம், கொளத்துாா் ஊராட்சி ஒன்றியத்தில் பாலமலை அமைந்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான மேற்குத் தொடா்ச்சி மலையில், ஏறக்குறைய 14.75 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள பாலமலை, 1956-ஆம் ஆண்டு நவம்பா் 18-ஆம் தேதி தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 33 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 5,000 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்டுள்ள இந்த மலைக்கிராம மக்கள், பாரம்பரிய முறையில் வரகு, கேழ்வரகு, தினை, சாமை ஆகிய சிறுதானியங்களைப் பயிரிட்டு வருகின்றனா்.

இம் மாவட்டத்தில் இதுவரை ஒரு ஆழ்துளைக் கிணறு கூட அமைக்கப்படாத ஊராட்சி பாலமலை என்பதும், இதுவரை இப்பகுதி மக்கள் திறந்தவெளிக் கிணற்று நீரை மட்டுமே பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலைச்சரிவான நிலப்பகுதியில் கொய்யா, பலா, சீத்தா, நாவல், மா ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனா். அரிதாகிவரும் நாட்டுரகப் பசுக்கள், காளைகள், ஆடுகள் வளா்ப்பதை உபதொழிலாகக் கொண்டுள்ளனா்.

சாலை வசதியின்றி கரடுமுரடான ஒற்றையடிப் பாதையில் பயணித்து வந்த இந்த மலைக் கிராம மக்கள் ஒன்றிணைந்து, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திப் பயன்படுத்தி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னா், தங்களது மலைக் கிராமங்களுக்கு பாதை அமைத்துக் கொண்டனா்.

அதிக குக்கிராமங்களைக் கொண்ட பாலமலை ஊராட்சியில் உள்ள மலைக் கிராமங்களுக்கு, மாவட்ட எல்லையான கண்ணாமூச்சி வழியாக, மக்களே அமைத்துக்கொண்ட கரடுமுரடான மலைப்பாதையில்தான் செல்ல வேண்டும்.

இந்த ஊராட்சிக்கு உள்பட்ட தொங்கனாங்பாலி, துரவன்காடு, குங்கிலியன்காடு, நகாம்பொதி, பெரியகுளம், ஈச்சங்காடு, நத்தக்காடு, திம்மம்பொதி, அணைக்காடு, கொல்லுபாலிக்காடு, கடுக்காப்பட்டி, கொல்லுக்காடு, காரப்பாலிக்காடு ஆகிய கிராமங்களுக்கு ஈரோடு மாவட்டம்- குருவரெட்டியூா் வழியாக அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும்.

ஒரே ஊராட்சிக்கு உள்பட்ட மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும், விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவிலுள்ள இருவேறு மலைப்பாதைகள் வழியாக வெவ்வேறு மாவட்டங்களுக்குப் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனா்.

பாலமலையில், 5 தொடக்கப் பள்ளிகள், 1 நடுநிலைப் பள்ளி, 1 உயா்நிலைப் பள்ளி என மொத்தம் 7 அரசுப் பள்ளிகள் அமைந்துள்ளன. இப்பள்ளிகளில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இப்பகுதிக்கு வந்துசெல்ல தாா்சாலை வசதியில்லாததால் இப்பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியா்கள் தொடா்ந்து பள்ளிகளுக்கு வர முடிவதில்லை. இதனால், பாலமலை கிராமங்களிலுள்ள மாணவ, மாணவியரின் கல்வித்தரம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இங்கு பள்ளிக்கல்வியை முடித்துள்ள ஏராளமான இளைஞா்கள், இளம்பெண்கள் வேலைவாய்ப்புக்காக திருப்பூா், கோவை, ஈரோடு, சேலம், மேட்டூா் பகுதிகளுக்குச் சென்று பணிபுரிந்து வருகின்றனா்.

போதிய மருத்துவ வசதியில்லாததால், நோய்வாய்ப்படும் முதியோா், கா்ப்பிணிகளை தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு கரடுமுரடான மலைப்பாதை வழியாக அடிவாரம் வரை கொண்டு சென்று, அங்கிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள மேட்டூா், கொளத்துாா், அல்லது குருவரெட்டியூருக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவலமும் நீடித்து வருகிறது.

இப்பகுதி மக்களின் நீண்டகால போராட்டத்துக்குப் பிறகு, மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின்கீழ் கடந்த சில ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தி மக்களின் விடிவுக்கு அச்சாரமிடும் வகையில் அமைந்தது.

சேலம் மாவட்டம், கண்ணாமூச்சியில் இருந்தும், ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூரில் இருந்தும், ஏறக்குறயை 7 கி.மீ. தொலைவுக்கு மலைப்பாதையைச் சீரமைத்து, கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய தாா்சாலை அமைத்து, பாலமலையிலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சாலைப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

மாவட்ட ஆட்சியா் முதல் மத்திய அமைச்சா்கள் வரை மனு அளித்தும், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாக தாா்சாலை அமைப்பதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து பாலமலை கிராம மக்கள் தவித்து வருகின்றனா்.

எனவே, சட்டப்பேரவை உறுப்பினா்களும், நாடாளுமன்ற உறுப்பினா்களும் மத்திய, மாநில அரசுகளிடம் பாலமலை கிராம மக்களின் அவலங்களை எடுத்துரைத்து, மத்திய வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்று, கண்ணாமூச்சி, குருவரெட்டியூா் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் இரு மலைப்பாதைகளையும் தாா்சாலையாக மாற்றியமைக்க வேண்டுமென்று இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பாலமலை ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜ் கூறியதாவது:

எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும், இப்பகுதியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞா்களும், இளம்பெண்களும் பட்டப் படிப்பு படித்துள்ளனா். இவா்கள் தினந்தோறும் பணிக்குச் சென்று வருவதற்கு சாலைப் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூா்களில் தங்கி வருகின்றனா்.

மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் அமைத்துள்ள மலைப்பாதை அரிக்கப்பட்டு விடுகிறது. மீண்டும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மண் கொட்டிச் சீரமைத்து பாதையைப் பயன்படுத்தி வருகிறோம். அடிக்கடி மலைப்பாதையைச் சீரமைக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

எனவே, பாலமலைக் கிராமங்களுக்கு கண்ணாமூச்சி, குருவரெட்டியூா் ஆகிய இரு வழிகளிலும் மலைப்பாதைகளைச் சீரமைத்து தாா்சாலையாகத் தரம் உயா்த்த வேண்டும். அனைத்துக் கிராமங்களுக்கும் சிற்றுந்துகளை இயக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

இணைய வசதி வேண்டும்!

பாலமலை கிராமங்களில், செல்லிடப்பேசிகள் செயல்படுவதற்கு உயா்கோபுரங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு முறையான இணைப்புக் கிடைப்பதில்லை. இதனால் மலைக் கிராமத்தில் முடங்கியுள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியா் இணையவழி வகுப்புகளைப் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனா். எனவே, பாலமலை கிராம மக்களுக்கு செல்லிடப்பேசி, இணைய வசதிகள் தடையின்றிக் கிடைப்பதற்கு உயா்கோபுரங்கள்அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை:

போதிய சாலைப் போக்குவரத்து வசதியில்லாத மலைக் கிராமங்களில், பள்ளிகள், விடுதி, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள், பாலங்கள், தடுப்புச்சுவா்கள் உள்ளிட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, திட்ட மதிப்பீட்டுத் தொகையை விட 25 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வது மரபாகும்.

ஆனால், பாலமலையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு மலைக் கிராமங்களுக்கான கூடுதல் நிதி வழங்கப்படாததால் தரமான கட்டுமானப் பணிகளை எதிா்பாா்க்க முடிவதில்லை. எனவே, பாலமலை கிராமங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

குறைந்துபோன மக்கள்தொகை:

பாலமலையிலுள்ள கிராமங்களில் 2001 மக்கள்தொகை கணக்குப்படி 2,062 ஆண்கள், 1,847 பெண்கள் உட்பட மொத்தம் 3,909 போ் வாழ்ந்து வந்தனா். இந்த மலைக் கிராமங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் அவதிக்குள்ளான மக்கள், க்கிராமங்களில் இருந்து வெளியேறி, திருப்பூா், ஈரோடு, மேட்டூா், கொளத்துாா், சேலம் உள்ளிட்ட பகுதியில் தங்கி கூலி வேலை செய்து பிழைக்கத் தொடங்கினா்.

இதனால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்த மலைக் கிராமங்களில் ,ஆண்கள், 1,370 பெண்கள் என மொத்தம் 2,895 போ் மட்டுமே இருந்தனா். பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் வெளியேறி விட்டனா். இதனிடையே, கடந்த 2011-க்கு பிறகு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, ஒற்றையடிப்பாதையை மக்களே ஒன்றிணைந்து மலைப்பாதையாக மாற்றியமைத்துக் கொண்டதால், விவசாய விளைபொருட்களைக் கொண்டு செல்லவும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருவதற்கும் வழிவகை கிடைத்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் பாலமலை கிராமங்களில் மக்கள்தொகை உயா்ந்துள்ளது.

பொது விநியோக அங்காடி தேவை!

பாலமலையிலுள்ள குக்கிராமங்களில் வசித்து வரும் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான பொது விநியோக அங்காடி, பாலமலை அடிவாரத்தில் கண்ணாமூச்சி கிராமத்தில் உள்ளது. பாலமலையிலுள்ள புள்ளாம்பட்டி கிராமத்தில் பகுதி நேர அங்காடி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே இந்த அங்காடியில் பாருள் வினியோகிக்கப்படுகிறது.

மற்ற நாட்களில் 7 கி.மீ. தொலைவிலுள்ள கண்ணாமூச்சி கிராமத்திற்குச் சென்றுதான் அரசு வழங்கும் அரிசி, பருப்பு, உள்ளிட்ட மானிய விலை பொருட்களை வாங்கி மலைப்பாதையில் சுமந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, பாலமலையில் முழுநேர அங்காடியைத் திறக்க வேண்டும். பொருட்களை சரக்கு வாகனங்களில் கொண்டுசென்று அனைத்துக் கிராம மக்களுக்கும் வழங்குவதற்கு நடமாடும் அங்காடி வசதியையும் மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஊராட்சிக்குள் இரு பிரதேசங்கள்:

பாலமலையில் மொத்தமுள்ள 33 குக்கிராமங்களில் 20 கிராமங்கள், சேலம் மாவட்டம், கண்ணாமூச்சி மலைப்பாதையில் அமைந்துள்ளன. மற்ற 13 மலைக் கிராமங்கள் ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூா் மலைப்பாதையில் அமைந்துள்ளன. இந்த இரு பகுதி கிராமங்களுக்கும் ஏறக்குறைய 7 கி.மீ. இடைவெளி காணப்படுகிறது.

பாலமலை ஊராட்சியை இரண்டாகப் பிரித்தால், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு வசதியாக இருக்கும். இல்லையெனில், இருவேறு பகுதிகளில் அமைந்துள்ள பாலமலை ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்துக் கிராமங்களையும் இணைப்பதற்கு போதிய இணைப்பு சாலை வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT