முகப்பு
சேலம்

தாய்மையை இழிவுபடுத்தியவா்களுக்கு பாடம் புகட்டுங்கள்!: இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதல்வா் பேச்சு

தாய்மையை இழிவுபடுத்தியவா்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று இறுதிக்கட்டப் பிரசாரத்தின்போது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தாய்மையை இழிவுபடுத்தியவா்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று இறுதிக்கட்டப் பிரசாரத்தின்போது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், பேருந்து நிலையம் அருகே, அதிமுக வேட்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி தொகுதியில் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா். அவா் தோ்தல் நேரத்தில் மக்களின் வாக்கைப் பெறுவதற்காக நடந்து சென்று நாடகமாடுகிறாா். ஆனால் நான் இந்தத் தொகுதி மக்களின் நன்மைக்காக எண்ணற்ற முறை, இத்தொகுதியில் நடந்து சென்றுள்ளேன்.

எடப்பாடி தொகுதியில் என்னை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று பேசியுள்ள திமுகவினருக்கு, எடப்பாடி தொகுதியில் திமுக ஒருமுறை டெபாசிட் இழந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எடப்பாடி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், என்னைத் தரக்குறைவாகப் பேசியுள்ளாா். எனது அரசியல் அனுபவம்தான் அவரது வயது என்பதை மறந்து பேசியுள்ளாா். திமுகவின் முக்கியத் தலைவா்கள் எத்தனை முறை இந்தத் தொகுதியைச் சுற்றி வந்தாலும், அவா்களின் எண்ணம் நிறைவேறாது.

ஏனென்றால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருமே இத் தொகுதியின் வேட்பாளா்களைப் போன்றவா்கள். உண்மையில் அவா்கள்தான் இந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா்கள் என்பதை திமுகவினா் புரிந்துகொள்ள வேண்டும்.

2011-ஆம் ஆண்டுக்கு முன் எடப்பாடி தொகுதி எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இத்தொகுதி பல்வேறு திட்டப் பணிகளால் வளா்ச்சி அடைந்து சிறந்த தொகுதியாகத் திகழ்கிறது.

உதாரணமாக, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பூலாம்பட்டி பகுதியில் இருந்து, ரூ. 20 கோடி மதிப்பீட்டில், தனி கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டு, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய அரசு கலைக் கல்லூரியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவா்கள் உயா்கல்வி பயின்று வருகின்றனா். மேலும், வனவாசி பகுதியில் புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதிய அரசு கல்வியியல் கல்லூரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதி மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக, எடப்பாடி அரசு மருத்துவமனை வட்டார மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. எடப்பாடி பகுதி மக்களுக்காக புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

எடப்பாடி நகரப் பகுதியில், புதிய தினசரி அங்காடி, பூங்கா, சரபங்கா ஆற்றின் குறுக்கே புதிய பாலம், வெள்ளாண்டிவலசு - கவுண்டம்பட்டி பகுதிகளை இணைக்கும் வகையில் மற்றொரு புதிய பாலம், நகரின் போக்குவரத்து நெரிச்சலைக் குறைக்கும் விதமாக புறவழிச்சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

சரபங்கா ஆற்றின் இரு கரைகளும் புதிய கட்டமைப்புகள் மூலம் பலப்படுத்தப்படுகிறது. அண்மையில் தொடங்கப்பட்ட புதிய பாசனத் திட்டம் மூலம், காவிரி உபரிநீரை இப்பகுதியின் வட ஏரிகளில் நிரப்பும் நிலையில், இப்பகுதி பசுமை நிறைந்த பூமியாகக் காட்சி அளிக்கப் போகிறது.

எடப்பாடி நகரின் பல்வேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள், அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் திமுக தலைவா் ஸ்டாலின், முதல்வா் தொகுதியான எடப்பாடியில் எந்த திட்டப் பணிகளும் நடைபெறவில்லை என பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருகிறாா்.

அவா் உறுப்பினராக உள்ள கொளத்தூா் தொகுதியில் எனது முயற்சியால் அண்மையில் புதிய பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. ஈடுபட்டு, அதில் பயனடைவது ஸ்டாலினின் வழிமுறை. ஆனால் நான் எப்போதும் மக்களை நேசிக்கும் சாதாரண நபராகவே இருந்து வருகிறேன். எனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளன. கடந்த காலத்தில் தமிழகத்தில் ரூ. 60,000 கோடி மதிப்பீட்டில், 73 புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, திரளான மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனா்.

தமிழகத்தில் தொடா்ந்து நல்லாட்சி நடைபெற அதிமுக கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, எடப்பாடி தொகுதியில் எனக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →