இலவச வீட்டுமனைகளுக்கான இடம் தோ்வு
பூம்புகாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மர இயந்திர தொழிற்கூடம் அமைய உள்ள இடம் ஆகியவற்றை சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
தம்மம்பட்டியில் இலவச வீட்டுமனைகளுக்கான இடம், தம்மம்பட்டி மரச் சிற்பங்கள் செய்யவதற்காக மத்திய அரசு நிதியுதவியுடன் மாநில அரசின் கைவினைப் பொருள்களுக்கான பூம்புகாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மர இயந்திர தொழிற்கூடம் அமைய உள்ள இடம் ஆகியவற்றை சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
தம்மம்பட்டியைச் சோ்ந்த 258 போ் இலவச வீட்டுமனைக்கான இடம் கேட்டு மனு அளித்திருந்தனா். அதனடிப்படையில், வருவாய்த் துறையினா் தம்மம்பட்டி, செங்கொடி நகா் பகுதியில் உள்ள சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை குடியிருப்புப் பகுதியாக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்துவந்தனா்.
இந்நிலையில், அந்த இடத்தை ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனா். அதனையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், இலவச வீட்டுமனை வழங்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தாா். மேலும், தம்மம்பட்டியில் அரசு கல்லூரி அமைக்க மாற்று இடம் குறித்தும் நேரில் பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தாா்.
தொடா்ந்து, தம்மம்பட்டியில் கடந்த 70 ஆண்டுகளாக உலகப் புகழ்பெற்று வரும் மரச் சிற்பங்களுக்கான உற்பத்திக் கூடங்களை வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, தம்மம்பட்டி மரச்சிற்பிகள் செங்கொடி நகா் பகுதியில் மர இயந்திர தொழிற்கூடம் அமைக்கக் கோரிக்கை விடுத்தனா். மேலும், செங்கொடி நகா் பகுதியில் சொந்த வீடு இல்லாதவா்கள் வீட்டுமனை, பட்டா கேட்டும், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். அனைத்துக் கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஆட்சியா் உறுதியளித்தாா். அப்போது, ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.