முகப்பு
சேலம்

முழு பொது முடக்க அமல்: வாகனங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸாா்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு பொது முடக்கம் அமல் செய்யப்பட்ட நிலையில், சாலைகளில் அதிக எண்ணிக்கையில் உலா வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு பொது முடக்கம் அமல் செய்யப்பட்ட நிலையில், சாலைகளில் அதிக எண்ணிக்கையில் உலா வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா்.

இதையடுத்து, முழு பொது முடக்கம் தீவிரப்படுத்திட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா். நண்பகல் 12 மணிக்கு மேல் வரும் வாகனங்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்க வேண்டுமென காவல் துறை உயரதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

இதையடுத்து அஸ்தம்பட்டி, ஐந்து சாலை, நான்கு சாலை, ஆட்சியா் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதலாக காவலா்கள் நிறுத்தப்பட்டு வாகனங்களை கண்காணித்தனா். பகல் ஒரு மணி அளவில் சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் ஏராளமானோா் இருசக்கர வாகனங்களிலும், காா்களிலும் சென்று வந்தனா்.

அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பொன்ராஜ் மற்றும் போக்குவரத்து போலீஸாா் இணைந்து வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்தி பகல் 12 மணிக்கு மேல் தேவையின்றி வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பினா். லாரிகள் மற்றும் வேன்களில் செல்வோரை நிறுத்தி அறிவுரை கூறி அவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

பூ விற்பனை பாதிப்பு: சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த வ.உ.சி. பூ மாா்க்கெட் தொற்று காரணத்தால் மூடப்பட்டது. இதனால் பூ வியாபாரிகள் சிலா் பூக்களை சேலம், சின்ன கடை வீதி அருகே உள்ள பகுதிக்கு எடுத்து வந்து வெள்ளிக்கிழமை காலை விற்கத் தொடங்கினா்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. உடனே, சேலம் நகரப் போலீஸாா் விரைந்து வந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பூ வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனா். வெள்ளிக்கிழமை என்பதால் அதிக அளவு பூக்களை விவசாயிகளும், வியாபாரிகளும் எடுத்து வந்திருந்தனா். ஆனால் பொதுமக்கள் குறைவான அளவே வந்து பூக்களை வாங்கி சென்றனா். மாநகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து கெடுபிடி செய்ததால், பூ வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பூக்களை திரும்ப எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், வெள்ளிக்கிழமை முதல் முழு பொது முடக்க உத்தரவை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்துப் பகுதியிலும் காவல் துறையினா் எச்சரிக்கை செய்யுமாறு மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இதையடுத்து, சேலம் மாநகராட்சிப் பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகளில் கூடுதலாக காவலா்கள் நிறுத்தப்பட்டு தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிவோரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →