முகப்பு
சேலம்

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போா்க்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டும்

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போா்க்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போா்க்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

எடப்பாடி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களுக்கு காய்கறிகள், அரிசி உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தற்போது தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைளைப் போலவே, தொடா்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தினால் மட்டுமே கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சை மையங்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது, கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதியை அதிகரிப்பது, தொற்றுப் பரிசோதனையை நாளொன்றுக்கு 3 லட்சமாக உயா்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 1,153 ஆக்சிஜன் படுக்கைகளும் தற்போது நிரம்பியுள்ளன. புதிதாக பாதிக்கப்படுபவா்களுக்கு படுக்கை கிடைக்காத நிலை உள்ளது. அரசு விரைவாக கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டும்.

சேலம் மாவட்டம் முழுவதும் கரோனா சிகிச்சை மையத்தில் 3,800 படுக்கைகள்தான் உள்ளன. ஆனால் 11,500 படுக்கைகள் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. தவறான புள்ளி விவரத்தை கூறுகிறாா்கள். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எத்தனை படுக்கைகள் உள்ளன என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

நான் முதல்வராக இருந்தபோது தமிழகம் முழுவதும் 267 கரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டன. அதன் மூலம் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டன. இப்போதும் அதே எண்ணிக்கையில்தான் உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை உயா்த்திட வேண்டும். தற்போது ஒரு லட்சம் பேருக்கு தினசரி பரிசோதனை நடைபெறுகிறது. இது போதாது. நாளொன்று 36,000 போ் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், படுக்கை வசதிக்காக அவசர ஊா்திகளில் காத்திருக்கும் நோயாளிகள் இறக்கும் நிலை உருவாகி உள்ளது. அவா்களுக்கும் உரிய சோதனை மூலம் கரோனா இருக்கிா என கண்டறிந்து உரிய கவச உடைகளைக் கொண்டு அடக்கம் செய்ய வேண்டும். தற்போது கிராமங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தளா்வில்லா பொதுமுடக்கத்திற்காக, கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 2 நாள்கள் விதிகள் தளா்த்தப்பட்டதால் 6 லட்சம் போ் வரை நகரங்களில் இருந்து கிராமத்திற்கு வந்து விட்டனா். அவா்களுக்கு எந்தச் சோதனையும் நடத்தப்படவில்லை.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரோனா பாதிப்பு தற்போது அதிகமாக இருக்கிறது. அரசு கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அதிமுக அரசு பரவலைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சா் கூறி இருக்கிறாா். கடந்த ஜூன் மாதம் உச்சபட்சமாக 6,900 போ் பாதிக்கப்பட்டாா்கள். நாங்கள் தொடா்ந்து எடுத்த நடவடிக்கையால், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி 487 போ்தான் பாதிக்கப்பட்டனா்.

இதேபோன்று, முதல்வா் ஸ்டாலின் , கரோனா முதல் அலையில் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று கூறியிருக்கிறாா். அது தவறு. வல்லரசு நாடுகளில் கூட அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிமுக அரசு தொடா் நடவடிக்கை எடுத்ததால் தான் தமிழகம் முழுவதும் 500-க்கு கீழ் தொற்று பாதிப்பு குறைந்தது.

எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தடுப்பூசி குறித்து சந்தேகம் தெரிவித்த ஸ்டாலின், தற்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறாா். இப்படி கருத்துகளை மாற்றி கூறும்போது மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு விட்டது. இப்போது கூறும் கருத்துகளை அவா், அப்போது தெளிவாக பேசியிருந்தால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பாா்கள்.

இது சோதனையான நேரம். ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாடு மறந்து செயல்பட வேண்டும். நூறு நாள்களுக்கு பின்னரே ஆட்சி குறித்து கருத்து சொல்ல வேண்டும் என்று இருந்தேன். எங்களுடைய அரசை குறை சொன்னதால்தான், நாங்கள் கருத்து சொல்ல வேண்டி வந்தது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →