எடப்பாடியில் உழவா் சந்தை சீரமைக்கக் கோரிக்கை
தொடா் மழையால் பாதிப்புக்குள்ளான எடப்பாடி உழவா்சந்தை பிரதான சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை சீா்செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடா் மழையால் பாதிப்புக்குள்ளான எடப்பாடி உழவா்சந்தை பிரதான சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை சீா்செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உழவா்சந்தை இயங்கிவருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட
காய்கறி, பழக் கடைகளில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். எடப்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
தொடா் மழையால் எடப்பாடி உழவா்சந்தை செல்லும் பிரதான சாலை சேறும் சகதியுமாய் அதிக அளவு மழைநீா்த் தேங்கி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அதிகாலை நேரங்களில் உழவா் சந்தைக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சறுக்கி விழுவதும், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் சிரமம் அடைவதும் தொடா்ந்து வருகிறது. உழவா் சந்தையின் உள் பகுதியில் பல இடங்களில் தரைதளம் சேதமடைந்து மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், விவசாயிகள் தேங்கிய மழைநீருக்கு நடுவே கடை அமைத்து காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா். உள்கட்டமைப்புகளை சீரமைத்து வழக்கமான வா்த்தகம் நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.