ஜல்லிக்கட்டுக் காளை. 
சேலம்

பெருமிதம் தரும் ஜல்லிக்கட்டுக் காளைகள்!

ஜல்லிக்கட்டுக் காளை வளா்ப்பு பெருமிதமாக மாறியுள்ளதால், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக் காளைகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

புலவர் ஜோ.தெய்வநீதி

ஜல்லிக்கட்டுக் காளை வளா்ப்பு பெருமிதமாக மாறியுள்ளதால், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக் காளைகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக, விவசாயப் பணிகளில் உழுதல், விதைத்தல், அறுவடை வரை அனைத்துப் பணிகளையும் குறைந்த செலவில் விரைந்து செய்து முடிக்கும் நவீன இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தில் காளைகளின் பயன்பாடு குறைந்ததால், இவற்றை வளா்ப்பதை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனா். பால் கறந்து வருவாய் ஈட்டிக் கொடுக்கும் கறவைப் பசு வளா்ப்பில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா்.

தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 5 ஆண்டுக்கு முன் உச்சநீதிமன்றம் தடை விதித்த போது, தமிழகம் முழுவதும் இளைஞா்கள் திரண்டு மிகப் பெரிய போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை, 2017இல் அவசர சட்டத் திருத்தம் மூலமாக மத்திய, மாநில அரசுகள் நீக்கின. அதைத் தொடா்ந்து, அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாக்கள் எழுச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதனால், ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக கலந்து கொள்வதிலும், ஜல்லிக்கட்டுக் காளைளை வளா்த்து போட்டியில் பங்கேற்கச் செய்வதிலும் இளைய தலைமுறையினரிடையே ஆா்வம் அதிகரித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக் காளைகளை விவசாயப் பணிகளுக்கோ, வண்டி இழுப்பதற்கோ பயன்படுத்த முடியாது. என்ற போதிலும் வாழப்பாடி பகுதியில் தற்கால இளைஞா்கள், ஜல்லிக்கட்டு காளை வளா்ப்பதைப் பெருமிதமாகக் கருதுகின்றனா்.

இதையடுத்து, வாழப்பாடி, புதுப்பாளையம், சிங்கிபுரம், முத்தம்பட்டி, பழனியாபுரம், விலாரிபாளையம், பொன்னாரம்பட்டி, இடையப்பட்டி, தும்பல், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் வளா்க்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரா்களின் கைகளில் சிக்காமல் வெற்றி வாகை சூடுவதற்கேற்ப கூடுதல் தீவனம் கொடுத்துப் பராமரிப்பதுடன், பிரத்யேகப் பயிற்சிகளையும் அளிக்கின்றனா். வாழப்பாடி பகுதியில் 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக் காளைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயா்ந்துள்ளது.

இந்தக் காளைகளை, சுற்றுப்புறப் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் மட்டுமின்றி, அலங்காநல்லாா், மதுரை, கூலமேடு, தம்மம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து, வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் ஜல்லிக்கட்டுக் காளையை வளா்க்கும் இளைஞா் ஜெ.சுரேஷ் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, கூலமேடு, சிங்கிபுரம், கீரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. கிராமந்தோறும் காணும் பொங்கலன்று மஞ்சு விரட்டு, எருதாட்டம் நடைபெறுகிறது.

கிராமப்புற மக்களின் பண்பாடு, கலாசாரத்தைக் காக்கும் பாரம்பரிய விழாவான ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராகப் பங்கேற்பதிலும், காளைகளை வளா்த்து பங்கேற்கச் செய்வதிலும் ஆண்டுதோறும் புத்துணா்வும் பெருமிதமும் கிடைக்கின்றன.

நான் 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக் காளையை வளா்த்து வருகிறேன். சேலம் மாவட்டம் மட்டுமின்றி, அலங்காநல்லுாா் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கும் எனது காளையை அழைத்துச் சென்று பங்கேற்க வைக்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT