முகப்பு
சேலம்

வாழப்பாடி அருகே குரும்பர் இன மக்களின் காமட்டா மாரியம்மன் திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில் குறும்பர் இன மக்களின் காவல் தெய்வமான உருவமில்லாத காமட்டா மாரியம்மனுக்கு 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில் குறும்பர் இன மக்களின் காவல் தெய்வமான உருவமில்லாத காமட்டா மாரியம்மனுக்கு 5 ஆண்டுக்கு பின் திருவிழா எடுத்து, பாரம்பரிய முறைப்படி நடனமாடி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவை காண, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். 

பழமைக்கும், தொன்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வாழப்பாடி பகுதியில் பல்வேறு கிராமங்களில், இன்றளவிலும் முன்னோர்களின் வழியில் பாரம்பரிய முறைப்படி வியப்பூட்டும் வினோத வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகின்றனர்.

இந்த வரிசையில் வெள்ளாளகுண்டம் கிராமத்தில் வாழ்ந்து வரும் குரும்பர் இன மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வரும் காமட்டா மாரியம்மன் திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். இக்கோயில் திருவிழா 5 ஆண்டுக்கு பிறகு தற்போது நடந்து வருகிறது.

இத்திருவிழாவில், தொடர்ந்து ஏழு நாட்களாக உருவச்சிலை இல்லாத காமட்டா அம்மனுக்கு, 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் உருளை வடிவ ஒரு அடி உயர கல்லில், அம்மன் வடிவம் அமைத்து காவல் தெய்வமாக கருதி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாரம்பரிய வினோத வழிபாடு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த வினோத திருவிழாவின் போது, பாரம்பரிய முறைப்படி 12 வகையான கிராமிய நடனமாடிய இளைஞர்கள், இளம்பெண்கள், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த வினோத வழிபாட்டு திருவிழாவை காண, வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், உறவினர்களுக்கும் விழாக் குழுவின் சார்பாக அறுசுவை விருந்து உபசரிக்கப்பட்டது.

இந்த குரும்பர் இன மக்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு முறையும் இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதுகுறித்து காமட்டா மாரியம்மன் கோவில் பூசாரி தங்கராசு கூறியதாவது: 

காமட்டா மாரியம்மனுக்கு உருவச்சிலைகள் வைத்து வழிபடுவது இல்லை. எங்களது முன்னோர்கள் வழியாக சந்ததிகளிடம் ஒப்படைத்து செல்லும் ஒரே கல்லினாலான ஒரு அடிக்கும் குறைவான உருளை வடிவ கல்லையே நாங்கள் கடவுளாக கருதி, அதற்கு உருவம் வரைந்து விழா எடுத்து வழிபாடு நடத்துகின்றோம். இந்த திருவிழாவின் போது எங்களின் பாரம்பரிய முறைப்படி 12 வகையான நடனமாடி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதையும் இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து வருகின்றோம்.
விரைவில், எங்களது குல வழக்கப்படி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →