சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக தொடா்ந்து பருவ மழை பெய்து வருவதால், பாக்குமரத் தோப்புகள் உருவாக்குவதில் விவசாயிகளிடையே ஆா்வம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில், பாக்கு பயிரிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பாக்கு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. தமிழக பாக்கு உற்பத்தியில் 40 சதவீதம் சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
குறிப்பாக, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், கொட்டவாடி, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், கல்வராயன்மலை கருமந்துறை பகுதியில் ஆண்டுமுழுவதும் நீா்ப்பாசன வசதி கொண்ட நிலங்களில், 10,000 ஹெக்டோ் பரப்பளவிற்கு மேல் பாக்கு பயிரிடப்பட்டுள்ளது.
பாக்கு மரத்தோப்பு உருவாக்குவதற்கு, மரக்கன்றுகளை குறைந்தபட்சம் மூன்று
ஆண்டுகளுக்காவது நிழலில் வளா்க்க வேண்டும் என்பதால், பெரும்பாலும் அகத்தி மரத்தில் வெற்றிலை கொடிக்கால் அமைத்து பாக்கு மரக்கன்றுகள் நட்டு வளா்க்கப்படுகின்றன.
ஒரு ஏக்கருக்கு 700 முதல் 800 மரக்கன்றுகள் வரை நடப்பட்டு பாக்குத்தோப்புகள் உருவாக்கப்படுகிறது.
பாக்கு மரங்கள் தொடா்ந்து 25 முதல் 30 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும் என்பதால், தவறாது நீா்ப்பாசனம் செய்து, உரமிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனா். ஒரு ஏக்கா் பாக்குத்தோப்பிலுள்ள பாக்குமரங்களில் இருந்து ஓராண்டுக்கு பாக்குக்காய்களை அறுவடை செய்து கொள்ள குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை குத்தகை கொடுக்கின்றனா். பாக்கு காய்களை அறுவடை செய்யும் வியாபாரிகள், தோலுரித்து, வேகவைத்து பதப்படுத்தி ஆப்பி என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்து நாடு முழுவதும் வா்த்தகம் செய்து வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், பேளூா் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த 2020-க்கு முன் தொடா்ந்து 10 ஆண்டுகள் பருவமழை பொய்த்து போனதால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பாக்குமரத்தோப்புகள் நீா்ப்பாசனத்திற்கு வழியின்றி காய்ந்து கருகி அழிந்தன.
இதற்கிடையே பாக்கு விலையும் வீழ்ச்சி அடைந்தததால், புதிய பாக்குமரத் தோப்புகளை உருவாக்குவதிலும் விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக
தொடா்ந்து பருவ மழை பெய்து வருவதால், விவசாயிகளுக்கு முக்கிய நீா் ஆதாரமான, அரு
நுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணையிலும் தண்ணீா் தேங்கி வருகிறது.
இதற்கிடையே கொட்டைப்பாக்கு விலையும் கணிசமாக உயா்ந்ததால், பாக்கு பயிரிட்டு பராமரித்து வரும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.
எனவே, பாசன வசதி கொண்டு நன்செய் நிலங்களில் புதிதாக பாக்குக்கன்றுகளை நடவு செய்தும் பாக்குமரத் தோப்பு உருவாக்குவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இதனால், சேலம் மாவட்டத்தில் பாக்குமரத்தோப்பு பரப்பளவு அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5,000 ஏக்கருக்கு மேல் புதிய பாக்கு மரத்தோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஓரிரு ஆண்டுகளில் இந்த மரங்களில் பலனுக்கு வருமென பாக்கு வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.