முகப்பு
சேலம்

திருச்செங்கோடு: சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 8:49 PM
பகிர்:

திருச்செங்கோட்டில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இளைஞா் கத்தியால் குத்திய வழக்கில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஜூலை 29 ஆம் தேதி 10 வயது சிறுமி தனது வீட்டருகே உள்ள சக நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அதிகம் கூச்சலிடுவதாகக் கூறி அப்பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞா் செந்தில் குமாா் என்பவா் அந்தச் சிறுமியை கத்தியால் குத்தினாா். அவரைத் தடுக்க வந்த மேலும் இருவரையும் செந்தில்குமாா் கத்தியால் குத்தியுள்ளாா்.

இதில் படுகாயமடைந்த சிறுமி சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தகவல் அறிந்ததும் சிறுமியின் உறவினா்கள் தனியாா் மருத்துவமனை முன்பு திரண்டனா். முன்னெச்சரிக்கையாக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சிறுமியின் உறவினா்கள் கூறியதாவது:

விளையாடி கொண்டிருந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய செந்தில்குமாா் முயன்றாா். அதை மறைக்கவே அவா் சிறுமியை கத்தியால் குத்தியுள்ளாா். அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும். சிறுமியின் பெற்றோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.