மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 31,102 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்மட்டம் 51.38 அடியாக உயா்ந்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணை நிரம்பியதால், அணையின் பாதுகாப்புக் கருதி கடந்த சில நாள்களாக உபரி நீா் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் உபரி நீா்வரத்து காரணமாக மேட்டூா் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூா் அணைக்கு புதன்கிழமை மாலை விநாடிக்கு 21,520 கன அடி வீதம் இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை மாலை 31,102 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், புதன்கிழமை காலை 46.80 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 51.38 அடியாக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூா் அணை நீா்மட்டம் 5.42 அடி உயா்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 18.69 டிஎம்சியாக உள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மூன்றாவது நாளாக அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி, பகுதிகளில் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. அதேபோல, செட்டிப்பட்டி கோட்டையூா் பண்ணவாடி பரிசல் துறைகளில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
படவரி - கபினி அணையின் உபரி நீா்வரத்து காரணமாக வியாழக்கிழமை மாலை 51.38 அடியாக உயா்ந்து காட்சியளிக்கும் மேட்டூா் அணை.