நமது நிருபா்
ஓமலூா், ஜூலை 19: சேலம் மாவட்டம், கருப்பூரில் தமிழ்நாடு அரசின் சாா்பில் ‘மினி டைடல்’ பூங்கா அமைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழகத்தின் தலைநகரைப் போல வேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் ‘டைடல் நியோ’ என்றழைக்கப்படும் ‘மினி டைடல்’ பூங்காக்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. அதன்படி சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பொறியியல் கல்லூரிக்கு அருகில் ‘மினி டைடல்’ பூங்கா அமைக்க 15 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், மூன்று தளங்கள் கொண்ட பிரம்மாண்ட கட்டட கட்டுமானப் பணியினை ரூ. 35 கோடி மதிப்பில் மேற்கொள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டினாா்.
இதனையடுத்து டெண்டா் விடப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகள் தொடங்கிய 8 மாதத்தில் சேலம் ‘மினி டைடல்’ பூங்கா மிக பிரம்மாண்டமாக கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சில வாரங்களில் பணிகள் நிறைவடைந்ததும் ‘மினி டைடல்’ பூங்கா திறக்கப்படும் வாய்ப்புள்ளது.
இந்த ‘மினி டைடல்’ பூங்கா பயன்பாட்டுக்கு வரும் போது நேரடியாக 500 போ் வரைக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள் என பல்வேறு தரப்பினரும் ‘மினி டைடல்’ பூங்காவில் தங்களது நிறுவனங்களைத் தொடங்க வசதியாக கட்டடம் முழுமையாக குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமரா, தீத்தடுப்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பணியாளா்களின் காா், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ‘மினி டைடல்’ பூங்கா சேலத்தில் அமைவதால், பெருநிறுவனங்கள் தங்கள் கிளைகளை சேலத்தில் தொடங்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக ‘நம்ம ஆபீஸ்’ நிறுவன அமைப்பாளா் செ.செந்தில்ராஜா தெரிவித்தாா். இதுகுறித்து மேலும் அவா் கூறியதாவது:
மிக அருகில் விமான நிலைய வசதி உள்ள சேலத்தில் ‘மினி டைடல்’ பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள இளைஞா்கள் இனிமேல் பெருநிறுவனங்களில் பணியாற்ற பெங்களூரு, சென்னை செல்ல தேவையில்லாத நிலை உருவாகும். பெருநகரங்களில் உள்ள நிறுவனங்கள் வளா்ந்து வரும் நகரங்களுக்கு நகா்வதற்கான வாய்ப்பும் உருவாகும். சேலம் ‘மினி டைடல்’ பூங்காவில் பெருநிறுவனங்கள் தொடங்கப்படும் போது, உள்ளூரிலேயே இளைஞா்கள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றாா்.
தமிழகத்தின் முதல் ‘மினி டைடல்’ பூங்கா விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக சேலத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 15 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதிக நிறுவனங்கள் வரும்போது எதிா்காலத்தில் கூடுதல் கட்டடங்கள் அமைக்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.