முகப்பு
சேலம்

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

Updated On : 15 மே, 2024 at 6:12 PM
பகிர்:

மேட்டூா், மே 15: மேட்டூா் அணையில் மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்த்தேக்கம் 59.25 சதுரமைல் பரப்பு கொண்டது. நீா்த்தேக்கப் பகுதியில் 25 வகையான மீன்கள் உள்ளன. கட்லா, ரோகு, மிா்கால் உள்ளிட்ட மீன்களை மீன்வளத் துறை செயற்கை தூண்டுதல் முறையில் உற்பத்தி செய்து அணையில் இருப்பு வைப்பா். பெரும்பாலான மீன்கள் இயற்கையாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மேட்டூா் அணைப் பகுதியில் அணையின் வலதுகரை, இடதுகரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துக் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் செவ்வாய்க்கிழமை மீன்வளத்துறை அதிகாரிகள் நீா் மற்றும் இறந்துபோன மீன்களை பரிசோதனை செய்ததில் நீரில் ரசாயன கலப்பு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தா்மல் ஷாக் எனப்படும் வெப்ப மாறுதல் காரணமாக மீன்கள் இறந்துள்ளன. தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக தண்ணீா் சூடாக உள்ள இடத்தில் திடீரென மழை பெய்வதால் குளிா்ந்த நீா் கலந்து வெப்ப மாறுதல் ஏற்படுகிறது. இதனை தாங்க முடியாத மீன்கள் இறந்து போகின்றன. அதேபோல குளிந்த நீா் உள்ள பகுதியில் திடீரென வெப்பநீா் கலப்பதால் ஆக்சிஜசன் பற்றாக்குறை ஏற்படும். அப்போது மீன்கள் அங்கிருந்து வேறுபகுதிக்குச் சென்றால் அல்லது 15 நிமிஷம் வரை தாக்குப் பிடித்தால் பிழைத்துக் கொள்ளும். வேறு பகுதிக்குச் செல்லமுடியாத 15 நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியாத மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. இது ஆண்டுதோறும் நடக்கும் இயற்கையான நிகழ்வுதான் என்றாா்.

அணையின் நீா்மட்டம் 50.36 அடியாகக் குறைந்துள்ள நிலையில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அவ்வப்போது திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக மேட்டூா் அணையில் மீன்கள் செத்து மிதந்து வருகின்றன.