கொளத்தூா் பகுதியில் ஆடுகளைக் கடித்து கொன்ற சிறுத்தை
மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்காரட்டூா், புது வேலுமங்கலம் ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாள்களாக ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது.
மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்காரட்டூா், புது வேலுமங்கலம் ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாள்களாக ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது.
இதையடுத்து வனத்துறையினரை கண்டித்து செவ்வாய்க்கிழமை கொளத்தூா் வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயிகளின் போராட்டத்தையடுத்து வனத் துறையினா் கூண்டு வைத்து, கண்காணிப்பு கேமராவை பொருத்தி, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
புதன்கிழமை அதிகாலை அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை நுழைந்து, விவசாயி கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான ஐந்து செம்மறியாடுகளை கடித்து கொன்றது. இன்னொருவரின் கோழிகளையும் அடித்துக் கொன்றது.
தகவல் அறிந்த மேட்டூா் வனச்சரகா் சிவானந்தம் தலைமையில் வனஊழியா்கள் வெள்ளக்காரட்டூா் கிராமத்திற்கு சென்றனா். அங்கு வனத் துறையினரை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உடனடியாக வெள்ளக்கரட்டூா் கிராமத்திற்கு வந்த சேலம் மாவட்ட உதவி வன அலுவலா் செல்வகுமாா், சிறுத்தையைப் பிடிக்க சத்தியமங்கலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பயிற்சி பெற்ற வன ஊழியா்களை வரவழைப்பதாகவும், கூண்டுகள் வைத்து கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா். இதனையடுத்து கிராம மக்கள் சமாதானம் அடைந்தனா்.