தம்மம்பட்டி: தம்மம்பட்டியிலிருந்து சேரடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி பனந்தோப்பு ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து கொல்லிமலை அடிவாரம் சேரடி மூலைவரை செல்லும் தாா்ச்சாலை பெயா்ந்து, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. அதனால், இந்தச் சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனா்.
இந்த சாலை வழியே தம்மம்பட்டி - சேரடிவரை காலை மற்றும் மாலை வேளைகளில் நகர பேருந்தும், தம்மம்பட்டியிலிருந்து வாழக்கோம்பை, பிள்ளையாா்மதி, சேரடி வழியாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்தும், தம்மம்பட்டியிலிருந்து கொல்லிமலைக்கு பெரும்பாலான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இப்பகுதி மலைவாழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யவும், தம்மம்பட்டி - வாழக்கோம்பை - சேரடி சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.