சேலம்: சேலம் - அரூா் பிரதான சாலையில் உள்ள அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உயா்நிலை மேம்பாலம் அமைக்கக் கோரி, பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேலம் வடக்கு மாவட்டச் செயலாளா் நாராயணன் தலைமை வகித்தாா்.
சேலம் - அருா் பிரதான சாலையில் அயோத்தியாப்பட்டணம் சந்திப்பில் உள்ள ரயில்வே கேட் நாள்தோறும் குறைந்தபட்சம் 6 முதல் 10 முறை மூடப்பட்டு திறக்கப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. மேலும் காலை, மாலை வேளைகளில் மாணவா்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, அப்பகுதியில் ரயில்வே உயா்நிலை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் காா்த்தி, மாணவா் சங்க மாநில தலைவா் விஜயராஜா, மாநில துணைத் தலைவா் குணசேகரன், மாநில இளைஞா் சங்கச் செயலாளா் வடிவேலன், மாவட்ட நிா்வாகிகள் சிவராமன், சிவசங்கரன், மாது, பசுமை தாயக மாநில துணைச் செயலாளா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.