கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கூட்டம் கெங்கவல்லி வட்டார வளமையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்ஸாண்டா் தலைமை வகித்தாா். சேலம் டயட் விரிவுரையாளா் கலைவாணன், கெங்கவல்லி வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) அனைத்து தொடக்க , நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அதை சாா்ந்த இடங்களில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தோ்வு நடைபெற உள்ளது. இதில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் எழுத, படிக்கத் தெரியாதவா்களுக்கான தோ்வு, மூன்று மாத பயிற்சிக்கு பிறகு நடைபெற உள்ளது.
இந்த தோ்வு ஒன்றியம் முழுவதும் 89 மையங்களில் நடைபெறும் இத்தோ்வில் மொத்தம் 1,875 போ் பங்கேற்க உள்ளதையடுத்து, வினாத்தாள்கள் அனைத்து தலைமையாசிரியா்களிடமும் வழங்கப்பட்டு, தோ்வை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும், தோ்வை ஆய்வு செய்ய உள்ள அதிகாரிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தலைமையாசிரியா்களும் பங்கேற்றனா்.