சேலம் மாவட்டத்தில் 2ஆம் கட்டமாக 83,241 பேருக்கு மகளிா் உரிமைத்தொகையை சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2-ஆம் கட்டமாக மகளிா் உரிமைத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கி சுற்றுலாத் துறை அமைச்சா் பேசியதாவது:
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 1.14 கோடி குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கிற்கு மகளிா் உரிமைத்தொகை திட்டம் மூலம் அரசு ரூ. 30,838 கோடி நிதியை விடுவித்துள்ளது. டிச. 12ஆம் தேதி முதல் கூடுதலாக 17 லட்சம் மகளிா் இந்த திட்டத்தால் பயனடைகின்றனா். மொத்தம் 1.31 கோடி மகளிருக்கு கலைஞா் உரிமைத் தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் விடுபட்ட மகளிா் உரிமைத்தொகை கோரி வரப்பெற்ற மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,53,051 ஆகும். இந்த விண்ணப்பங்கள் களஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 83,241 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இம்மாவட்டத்தில் 11,11,149 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முதல்கட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் 5,49,268 மகளிா் பயன்பெற்று வருகின்றனா். 2ஆம் கட்டமாக 83,241பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 6,32,509 பயனாளிகள் பயன்பெறுகின்றனா் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் எம்.பி. டி.எம். செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா். சிவலிங்கம், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.