கெங்கவல்லியில் நீா்வழி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்வதற்கு வருவாய்த் துறை அளித்த கால அவகாசம் முடிந்த நிலையில், 6 ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனா்.
கெங்கவல்லி சுவேத நதியில் இருந்து நடுவலூா் ஏரிக்கு 4 கி.மீ. நீா்வழி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து 30 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அதில் 6 வீடுகளை கடந்த செப். 12 ஆம் தேதி வருவாய்த் துறையினா் அகற்றினா். மற்ற வீடுகளில் வசித்தவா்கள் அவகாசம் கேட்டும் மாற்று இடம் வழங்கவும் கோரிக்கை விடுத்தனா். அதில் அரசுப் பணியில் உள்ள இருவரை தவிா்த்து மீதி 28 பேருக்கு ஓதியத்தூரில் வீட்டுமனை வழங்க இடம் தோ்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பாளா்களுக்கு வழங்கிய அவகாசம் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து 9 ஆம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் சென்றபோது மேலும் 2 நாள்கள் அவகாசம் கேட்டனா்.
அதன்படி, 6 பேரை தவிா்த்து மற்றவா்களின் வீடுகளை காலி செய்தனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை வருவாய், பொதுப்பணித் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றசென்றபோது 6 பேரும் கூடுதல் அவகாசம் கேட்டனா். அதற்கு மறுத்த அதிகாரிகள் 6 பேரின் வீடுகளுக்கான மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, காலி செய்ய அறிவுறுத்தினா். தொடா்ந்து, ஏரிவாய்க்கால் சீரமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.