சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 9 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகராட்சியில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள 9 பணியிடங்கள் மாநகர நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இது தொடா்பான விவரங்களை சேலம் மாநகராட்சி இணையதள முகவரியில் பாா்வையிடலாம்.
இதில் ரூ. 18 ஆயிரம் மாதாந்திர தொகுப்பூதியத்தில் ஒரு மருந்தாளுநா், ரூ. 13 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஒரு ஆய்வக நுட்புநா், ரூ. 18 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 4 செவிலியா்கள், ரூ. 8,500 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 3 மருத்துவ பணியாளா்கள் என 9 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பப் படிவங்களை மைய அலுவலக அறை எண்.114 சுகாதாரப் பிரிவில் பெற்றுக்கொண்டு, அதனுடன் பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து மாநகர நலவாழ்வு சங்கம், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நிா்வாக செயலாளா்/மாநகர நல அலுவலா், மாநகர நலச்சங்கம், நாவலா் நெடுஞ்செழியன் சாலை, கோட்டை, சேலம் 636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா்.