குழந்தைகள் நலன் சாா்ந்த பணிகளில் ஈடுபடும் மருத்துவா்கள், காவல் துறையினருக்கான திறன் வளா்ப்பு பயிற்சி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா முன்னிலை வகித்தாா். குழந்தைகள் மீதான உரிமை மீறல்களைத் தடுத்து பாதுகாப்பதிலும், வழக்குகளை விசாரிப்பதற்கும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்களை இந்த ஆணையம் கொண்டுள்ளது.
மேலும், காவல் துறை, நீதிமன்றம் மற்றும் பிற அலுவலகங்களிலிருந்து உரிய ஆவணங்களை பெற்று குழந்தைகளுக்கு எதிரான உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறிப்பாக, உரிமை மீறல்கள் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் உரிய மறுவாழ்வு நடவடிக்கை குறித்து அரசுக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்டு இந்த ஆணையம் செயல்படுகிறது.
இப்பயிற்சியில் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா்கள், குழந்தை நல காவல் அலுவலா்கள், சிறப்பு சிறாா் காவல் உதவி பிரிவு, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு, மகப்பேறு மருத்துவா்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவா்கள் ஆகியோருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குழந்தை நேய முறையில் அணுகுதல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் மோ. கசிமீா் ராஜ் மற்றும் உறுப்பினா் மருத்துவா் மோனா மட்டில்டா பாஸ்கா், குழந்தை மற்றும் இளம்பருவ மனநல மருத்துவம் துறை அலுவலா் டாக்டா் சத்யராஜ், சட்ட மருத்துவ மற்றும் நச்சுயியல் இணைப் பேராசிரியா் டாக்டா் லத்தீப் ஆா்.ஜான்சன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சந்தியா, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் சா.ராஜ்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.