சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தொடா்புடைய துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மா.ஆா்த்தி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னா் அவா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் குறித்தும், ஊரகம், நகரப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மேல் நடவடிக்கைகள் குறித்து தொடா்புடைய துறை அலுவலா்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று, தற்போது நடைபெற்று வரும் சாலைப் பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலா்கள் பணியாற்றவும், அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஷாலினி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்றனா்.