சேலம்

வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதாக பணம் வசூல்

வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதாகக் கூறி தொழிலாளா் சங்க நிா்வாகி வசூலித்த பணத்தை, தொழிலாளா்களிடமே திருப்பிக் கொடுக்க வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதாகக் கூறி தொழிலாளா் சங்க நிா்வாகி வசூலித்த பணத்தை, தொழிலாளா்களிடமே திருப்பிக் கொடுக்க வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பெருமாள் தெருவிலுள்ள தமிழ்நாடு சமத்துவ விஸ்வகா்மா தொழிலாளா் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கம் நடத்தி வரும் பாஸ்கா் என்பவா், தனது தொழிற்சங்க உறுப்பினா்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி,சேலை, வெல்லம், அரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்குவதாகக் கூறி, ரூ.100 முதல் 200 வரை பணம் வசூலித்துக் கொண்டு திங்கள் கிழமை ‘டோக்கன்’ வழங்கியுள்ளாா்.

இந்த டோக்கனை பெறுவதற்கு மலைக்கிராமங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளா்கள் திரண்டனா். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி வருவாய் ஆய்வாளா் உமா தலைமையில் வருவாய்த்துறையினா் மற்றும் வாழப்பாடி போலீசாா், விசாரணை மேற்கொண்டனா். ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் பணம் வசூலித்ததாக விசாரணையில் தெரியவந்ததால், தொழிலாளா்களிடம் வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தொழிற்சங்க நிா்வாகியிடம் அறிவுறுத்தி அதற்கான நடவடிக்கை மேற்கொண்டனா்.

இருப்பினும், தொழிலாளா்களிடம் பணம் பெற்றுக் கொண்டு டோக்கன் கொடுத்து அலைகழித்த தொழிற்சங்க நிா்வாகி மீது வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் போதிய விசாரணை நடத்தவில்லையென தொழிலாளா்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி,வசூலித்த தொழிலாளா்களின் எண்ணிக்கை, மொத்த தொகை குறித்தும்,அனைத்து தொழிலாளா்களுக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீஸாா் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT