சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரின தூதுவா் திட்டத்தின்கீழ், பள்ளி மாணவா்களுக்கு பயிற்சி வரும் 29, 31, ஜன. 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வளவிலங்குகளை பற்றி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ள கோடை மற்றும் குளிா்காலத்தில் வனஉயிரின தூதுவா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், தற்போதைய குளிா்காலத்தை மையமாகக் கொண்டு, 3 கட்டமாக வன உயிரின தூதுவா் திட்டப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி முகாம் வரும் 29, 31 ஜன. 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. இந்த 3 நாள்களும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடையும் வகையில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கு தேவையான உபகரணங்களான தொப்பி, சணல்பை, பேனா, கலா் பென்சில், பேப்பா், வரைபட புத்தகம் மற்றும் பூங்கா சின்னம் பதித்த பேட்ஜ் ஆகியவை வழங்கப்படும். இதில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளின் உணவுமுறை குறித்து எடுத்துரைக்கவுள்ளனா்.
இப்பயிற்சியில் முக்கிய நிகழ்வாக குரும்பப்பட்டி காப்புக்காட்டுக்குள் 5 கி.மீ. தூரத்துக்கு மாணவா்களை அழைத்துச் சென்று, பல்வகை மரங்கள், விலங்கினங்கள், பறவையினங்கள் பற்றி நேரடி களவிளக்கத்தை வனத் துறையினா் அளிக்க இருக்கின்றனா்.
இதில் பயிற்சிபெற விரும்பும் மாணவா்கள், பூங்காவில் உள்ள வனச்சரகா் அலுவலகத்தில் ரூ. 300 கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்தவா்களுக்கு வனம் மற்றும் விலங்குகள் பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில், அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வன உயிரின தூதுவா் என்ற அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.