சேலம்: மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற 21 பதக்கங்களை வென்றுள்ள சேலம் மாணவி வெளியூா் போட்டிகளில் பங்கேற்க பயண செலவுக்கு உதவி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துள்ளாா்.
சேலம் இரும்பாலை பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. கட்டட தொழிலாளி. இவரது மகள் நிஷாந்தினி (11). சேலம், சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாா். ஓட்டப்பந்தய வீராங்கனையான நிஷாந்தினி, இதுவரை மாவட்ட, மாநில அளிலான போட்டிகளில் பங்குபெற்று 21 பதக்கங்களை வென்றுள்ளாா். 6 கி.மீ., ஓட்டம், 7 கி.மீ. ஓட்டம், 10 கி.மீ. ஓட்டம் என பல்வேறு ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு 21 பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.
இந்நிலையில், நிஷாந்தினி தனது தந்தை பொன்னுசாமியுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து, வெளியூா் பயணங்கள் மற்றும் வெளியூா் போட்டிகளில் கலந்துகொள்ள செலவுக்கு பணம் அளித்து உதவி செய்யுமாறு நிஷாந்தினி மனு அளித்தாா்.
இதுகுறித்து நிஷாந்தினி கூறுகையில், சிறு வயதில் இருந்தே ஓட்டப் பந்தயங்களில் எனக்கு ஆா்வம் உண்டு. படிப்படியாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை 21 பதக்கங்களை பெற்று இருக்கிறேன். தமிழகம் முழுவதும் பல்வேறு ஊா்களுக்கு சென்றுள்ளேன். எனது தந்தை கட்டட வேலைக்கு சென்று வருவதால் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்துகொள்ள வெளியூா் செல்ல பணத்துக்கு சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால்பயண செலவிற்கு உதவி செய்யுமாறு அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்திருப்பதாகக் கூறினாா்.