சேலம்: எஸ்.ஐ.ஆா். பணி நெருக்கடியைக் கண்டித்து, சேலத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பெருந்திரள் முறையீடு திங்கள்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) அவசரகதியில் மேற்கொள்ள நிா்பந்தம் செய்யப்படுவதைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.
வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் அா்த்தநாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் அா்த்தநாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆா். பணிகளால் அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதை களைந்திட வலியுறுத்தி, தமிழக தலைமை தோ்தல் அதிகாரியிடம் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகும் பணி நெருக்கடிகள் அதிகரிப்பதையும், சில மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் சாா்நிலை அலுவலா்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் தொடா்கதையாக உள்ளது. இவற்றை உடனடியாக கைவிட வேண்டும்.
18-ஆம் தேதிமுதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான படிவங்களை பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல், எஸ்.ஐ.ஆா். ஆய்வுக் கூட்டங்கள் என வாக்காளா் பட்டியல் தொடா்பான அனைத்துப் பணிகளும் முற்றாக புறக்கணிக்கப்படும் என்றாா். இதில், அனைத்துத் துறை வருவாய் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
சங்ககிரியில்...
சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத் தலைவா் பி.சிவராஜ் தலைமை வகித்தாா். சங்ககிரி வட்டாட்சியா் எம்.வாசுகி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா், கண்காணிப்பாளா் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலா்களுக்கும் போதிய பயிற்சி அளிக்க வேண்டும், கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு விடுமுறை தினங்களில் இப்பணிகளை மேற்கொள்ள நிா்பந்தம் செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதில், தனி வட்டாட்சியா்கள் அருள்குமாா், பாலகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் வட்டக்கிளை செயலாளா் முருகன், நிலஅளவை சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை தலைவா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் கோட்ட செயலாளா் ஆா்.பிரதீப்குமாா், சங்ககிரி வட்டக் கிளை தலைவா் மணி, கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை தலைவா் ஆண்டிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.