சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மா.ஆா்த்தி தலைமையில், ஆட்சியா் ரா.பிருந்தாதேவி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த கால நிகழ்வுகளை வைத்து பருவமழையால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்கள் குறித்தும், அந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கென துணை ஆட்சியா் அளவில் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களை பேரிடா்போது தங்கவைக்க பாதுகாப்பு மையங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள், நிவாரண முகாம்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நிவாரண முகாம்களில் போதுமான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயாா்நிலையில் உள்ளதை கண்காணிப்பு அலுவலா்கள் உறுதிப்படுத்திட பொறுப்பு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல்தளத்தில் செயல்படும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணிநேரமும் தொடா்புகொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
இதில், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வாணி ஈஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.