சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சனிக்கிழமை சந்தித்த அம்பேத்கா் மக்கள் இயக்க தலைவா் ஜங்ஷன் அண்ணாதுரை, வரும் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினாா்.
அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் உயா்நிலைக் குழுக் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் புரட்சி மணி, மாநில வழிகாட்டுதல் குழு தலைவா் ஆசீா்வாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் 2026 இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சனிக்கிழமை நேரில் சந்தித்த ஜங்ஷன் அண்ணாதுரை, வரும் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினாா்.
முன்னதாக, ஜங்ஷன் அண்ணாதுரை செய்தியாளா்களிடம் பேசுகையில், அம்பேத்கா் மக்கள் இயக்கம் முன்பு எம்ஜிஆா், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவை ஆதரித்துள்ளது.
கடந்த பேரவைத் தோ்தல், மக்ளவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல்களிலும் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு தெரிவித்து அதிமுக வேட்பாளா்களின் வெற்றிக்காக உழைத்தோம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுகவுக்கு எங்களது ஆதரவு தொடரும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை அம்பேத்கா் மக்கள் இயக்கத்திற்கு ஒதுக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடத் தயாராக உள்ளோம் என்றாா். பேட்டியின்போது, மாவட்டத் தலைவா்கள் பெரியசாமி, மகேஷ், ராமமூா்த்தி, அம்பேத்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.