சேலம் மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் செயற்குழு கூட்டம் எடப்பாடியை அடுத்த நைனாம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அவைத் தலைவா் தங்கமுத்து தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மேற்கு மாவட்டச் செயலரும், மக்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி கலந்துகொண்டு எஸ்.ஐ.ஆா். பணியில் விடுபட்ட வாக்காளா்களை மீண்டும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் வகையில், 13 ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிா்வாகிகள் திமுக கொடியை ஏற்றிவைத்து, அப்பகுதி பெண்களை திரட்டி சாதி, மத பேதமின்றி பொங்கலிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் வழங்கி திராவிட பொங்கல் விழா கொண்டாட வேண்டும். மேலும், பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற வீரா்களுக்கு ஒவ்வொரு ஒன்றியப் பகுதிக்கும் தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ. 13 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்குவது எனவும், இணையதளம் வாயிலாக பதிவுசெய்து இளைஞா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழுக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் சுந்தரம், சம்பத்குமாா், நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா, மாநில செயற்குழு உறுப்பினா்கள் பி.ஏ.முருகேசன், பூவா கவுண்டா், ஒன்றியச் செயலாளா்கள் நல்லதம்பி, பரமசிவம் உள்ளிட்ட திரளான திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்
படவரி...
எடப்பாடியில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் டி.எம். செல்வகணபதி எம்.பி.