காலி பணியிடங்களை நிரப்ப சித்த மருத்துவ பட்டதாரிகள் வலியுறுத்தல்
மதுரை, அக்.13: தமிழகத்தில் சித்த மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு சித்த மருத்துவப் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் த
மதுரை, அக்.13: தமிழகத்தில் சித்த மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு சித்த மருத்துவப் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ஆர். குமார், செயலர் ஜே.ராஜசேகரன், நிர்வாகி ஆர்.சாந்தி ஆகியோர் தெரிவித்துள்ளது:
தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் நிலையில், முழுவதும் தமிழ் பாடங்கள் மூலம் மருத்துவம் படித்து மருத்துவர்களாகிய சித்த மருத்துவர்கள் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
Advertisement
கடந்த பட்ஜெட்டின்போது அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தும், இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அனைத்துத் துறைகளிலும் பணி மூப்பு அடிப்படையில் அரசுப் பணியாணை வழங்கப்பட்டுவரும் இக்காலகட்டத்தில், கடந்த 22 ஆண்டுகளாக பணி மூப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படாத துறையாக சித்த மருத்துவத் துறை உள்ளது.
மத்திய அரசின் ஊரக சுகாதாரத் திட்டத்தின்கீழ் 1,450 காலிப் பணியிடங்கள் இருந்தும், 200 பேருக்கு மட்டுமே குறைந்த ஊதியத்தில் அதுவும் தாற்காலிகமாக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 4,000 பட்டதாரி மருத்துவர்கள் இருக்கும் இத்துறையில் வெறும் 450 மருத்துவர்களுக்கு மட்டுமே போட்டித் தேர்வு மூலம் பணி கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழில் மருத்துவம் படித்த சித்த மருத்துவப் பட்டதாரிகளின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.