காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பி.எல். முத்துசுப்பிரமணியன் என்ற மாணவர் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடத்தையும், சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று, இப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இப் பள்ளி தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100 சதவிகித தேர்ச்சி பெற்று வருகிறது.
தினமும் காலையில் மும்மத வழிபாடு மற்றும் தியானத்துடன், பள்ளியின் கல்விப் பணிகள் தொடங்குகின்றன. கல்வியின் அடிப்படைத் திறன்களான படித்தல், எழுதுதல், பேசுதல் ஆகியவற்றுக்குத் தகுந்த பயிற்சிகள் தரப்படுகின்றன. தியானம், யோகா, கராத்தே, சதுரங்கம், நாட்டியம், ஸ்கேட்டிங் ஆகியவற்றுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
பள்ளியிலும், பிற அமைப்பினர் நடத்தும் பல்வேறு திறன் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாணவ, மாணவியர் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவதில் முன்னணியில் உள்ளனர்.
வியாழக்கிழமை காலையில் மும்மத இசை வழிபாடு நடைபெறுகிறது. மதியம் இயற்கை உணவு வழங்கப்படுகிறது.
மழலைச் செல்வங்களுக்கு ஆண்டுதோறும் வண்ணமிகு பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக காரைக்குடி மகரிஷி குரல் என்ற மாத இதழ் வாயிலாக படைப்பாற்றல் வளர்ப்பதுடன், சுதந்திர தினம், குடியரசு தினம், காமராஜர் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், குழந்தைகள் தினம், கிறிஸ்துமஸ், பொங்கல் என பல்வேறு விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் அரசுப் பொதுத் தேர்வில் முதலிடம் பெறும் மாணவரின் பெற்றோரை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக் கொடியை ஏற்றவைப்பது வழக்கம்.
காற்றோட்டமும், வெளிச்சமும் நிறைந்த, ஒலிபெருக்கி வசதியுடன் கூடிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், இணையதள இணைப்புடன் கூடிய கணிப்பொறி ஆய்வகங்கள், நூலக வசதி, கிராமப் பகுதிகளிலிருந்து வந்து செல்ல வாகன வசதி ஆகியவை செய்துதரப்பட்டுள்ளன.
அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்று இப் பள்ளி வளர்ந்துள்ளமைக்கு இப் பள்ளியின் முதல்வரும், தாளாளருமான ஆர்.கே. சேதுராமனின் கடின உழைப்பும், பெரும் முயற்சியும் காரணம் என்றார் பள்ளியின் நிர்வாக இயக்குநர் அஜய் யுக்தேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.