முகப்பு
மதுரை

நூலகங்களில் பழைய நாளிதழ்களை விற்பனை செய்ய அதிகாரிகளே விலைப் புள்ளியை திருத்துவதாகப் புகார்

சிவகங்கை, அக். 7: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் பழைய பத்திரிகைகளை விற்க அதிகாரிகளே விலைப் புள்ளிகளை திருத்தி அனுப்புவதாகப் புகார் எழுந்துள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில் 42 கிராம நூலகங்கள், 48 ஊ

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:44 PM
பகிர்:

சிவகங்கை, அக். 7: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் பழைய பத்திரிகைகளை விற்க அதிகாரிகளே விலைப் புள்ளிகளை திருத்தி அனுப்புவதாகப் புகார் எழுந்துள்ளது.

 சிவகங்கை மாவட்டத்தில் 42 கிராம நூலகங்கள், 48 ஊர்ப்புற நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் பொதுமக்கள் படிப்பதற்காக தினசரிகள், வாராந்திர, மாதாந்திர பத்திரிகைகள் வாங்கப்படுகின்றன.

 படித்து முடித்ததும் அந்த பத்திரிகைகளைச் சேகரித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அவற்றை எடைக்குப் போட்டு, அதில் கிடைக்கும் தொகையை 8448 என்ற நூலக நிதி வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

 அதன்படி, அந்தந்த நூலகர்கள் அந்த பகுதியில் உள்ள பழைய பேப்பர் வியாபாரியிடம் விலை விவரங்களைப் பெற்று, ஒவ்வொரு பத்திரிகைக்கும் விலைப் புள்ளிகளை தயார் செய்து மாவட்ட மைய நூலகத்துக்கு அனுப்புவர்.

 அவை பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். பின்னர், அந்த விலைப் புள்ளியில் உள்ள விலைக்கு விற்று பணத்தை அனுப்புவது வழக்கம்.

 ஆனால், இவ்வளவு காலமாக இருந்த நடைமுறையை மாற்றி, இந்த முறை அந்த விலைப் புள்ளிகளை அதிகாரிகள் திருத்தி, திருத்தப்பட்ட விலைக்குதான் விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக 6 மாதமாக வந்த தினசரி சுமார் 20 கிலோ எடை வருகிறது என்றால், அதற்கு சராசரி விலையாக கிலோ ரூ.4 எனக் கணக்கிடப்பட்டு ரூ.80-க்கு விலைப் புள்ளி அனுப்பப்படுகிறது என்றால். அதிகாரிகள் அதன் எடையை 35 கிலோ எனப் போட்டு விலையையும் ரூ.5.50 எனத் திருத்தி விற்பனை ஆணை வழங்கி அதற்கான விலையைச் செலுத்துமாறு வற்புறுத்துகின்றனராம்.

 அதிகாரிகள் அனுப்பும் விலைப் புள்ளியின்படி வியாபாரிகள் பழைய பேப்பர்களை எடுக்க மறுக்கின்றனர்.

 எனவே நூலகர்கள் அனுப்பிய விலைப் புள்ளிகளின் தொகையையே பரிசீலனை செய்து, புதிய விற்பனை ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் மகாதேவனிடம் கேட்டபோது, விலைப் புள்ளியை மூடிய நிலையில்தான் வழங்க வேண்டும். ஆனால், நூலகர்கள் அவ்வாறு வழங்குவதில்லை. எடையையும் குறைத்து குறிப்பிடுகின்றனர். மேலும், எங்களுக்கும் சில நெருக்கடிகள் உள்ளன. தணிக்கையின்போது எங்களிடம் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், எல்லா மாவட்டங்களிலும் உள்ள அதே அளவு விலைக்குதான் விற்குமாறு விற்பனை ஆணை வழங்கியுள்ளோம்.

 துறையின் வளர்ச்சிக்காகதான் இவ்வாறு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →