முகப்பு
மதுரை

அரசு கேபிள் டி.வி. குறித்து மக்கள் புகார் சிக்னல் தரமில்லை; படங்கள் தெளிவில்லை

சிவகங்கை, செப். 21: அரசு கேபிள் டி.வி.க்காக பல பகுதிகளில் எம்.எஸ்.ஓ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனுபவம் இல்லாததால் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க முடியவில்லை. மேலும் விலை குறைந்த தரமற்ற கருவிக

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:51 PM
பகிர்:

சிவகங்கை, செப். 21: அரசு கேபிள் டி.வி.க்காக பல பகுதிகளில் எம்.எஸ்.ஓ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனுபவம் இல்லாததால் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க முடியவில்லை. மேலும் விலை குறைந்த தரமற்ற கருவிகளைப் பயன்படுத்துவதால் டி.வி. சிக்னல் தரமற்றதாக உள்ளது என பரவலாகப் புகார் எழுந்துள்ளது.

  தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஏகபோகத்தைத் தடுக்க அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன் கீழ் மாநிலம் முழுவதும் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்கள் எனப்படும் எம்.எஸ்.ஓ.க்கள், லிங்க் ஆபரேட்டர்கள் எனப்படும் கேபிள் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டனர்.

  சில இடங்களில் முன் அனுபவம் இல்லாதவர்கள் அரசியல் பலம் காரணமாக எம்.எஸ்.ஓ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவசர அவசரமாக குறைந்த விலையில், தரமற்ற கருவிகளை வாங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளனர். இதனால் சிக்னல் தரமில்லாமல் கிடைப்பதால் தொலைக்காட்சியில் படங்கள் தெளிவாக இல்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

  மேலும் போதுமான முன் அனுபவம் இல்லாததால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும்போது அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாத நிலை நிலவுகிறது. இது இப்படி இருக்க கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் கையைக் கடிக்கும் நிலையே நிலவுகிறது.

    இதுகுறித்து கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஒருவர் கூறியது:

   அரசு கேபிள் டி.வி. மூலம் மாதம் ரூ.70 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் அரசுக்கு ரூ.20 மற்றும் ஆபரேட்டருக்கு ரூ.50 சேரும். கேபிள் ஆபரேட்டருக்கு மின்சாரச் செலவு, பணியாளர் ஊதியம், பராமரிப்புச் செலவு என ஒரு இணைப்புக்கு மாதம் ரூ.40 வரை செலவாகிறது. மீதம் ரூ.10 மட்டுமே லாபமாக எஞ்சி நிற்கும். இவ்வளவு குறைந்த லாபத்தில் எப்படி தொழில் செய்வது எனத் தெரியவில்லை.

  கடைக்கோடி கேபிள் ஆபரேட்டரும் பாதிக்கப்படாமல் திட்டம் தீட்டப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். நாங்களும் அரசு கேபிள் டி.வி.யில் இணைந்தால் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பி வந்தோம். ஆனால், தரமற்ற ஒளிபரப்பு காரணமாக பலர் டி.டி.எச். சேவையை நாடத் தொடங்கியுள்ளனர்.

சிவகங்கையில் வாரம் 25-30 என்ற அளவில் விற்பனையான டி.டி.எச். இப்போது 50 எண்ணிக்கையில் விற்பனையாகிறது.  இந்த நிலையைப் போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →