முகப்பு
மதுரை

புத்துயிர் பெறுமா சிவகங்கை நகராட்சி பூங்கா?

சிவகங்கை, ஏப். 25: சிவகங்கை நகரில் குடும்பத்துடன் மாலையில் பொழுதைக் கழிக்க ஏற்ற இடமாக உள்ள பூங்கா சீரமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.  விடுமுறைக்கு மக்கள் பொதுவாக சினிமா, பீச், கே

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

சிவகங்கை, ஏப். 25: சிவகங்கை நகரில் குடும்பத்துடன் மாலையில் பொழுதைக் கழிக்க ஏற்ற இடமாக உள்ள பூங்கா சீரமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

 விடுமுறைக்கு மக்கள் பொதுவாக சினிமா, பீச், கேளிக்கை பூங்காக்கள் என செல்வதுண்டு. ஆனால், சிவகங்கையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. இங்குள்ள நகராட்சிப் பூங்கா மட்டும் ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. அதை சீரமைத்தால் ஏராளமான மக்கள், சிறுவர்கள் மகிழ்ச்சியடைவர்.

 சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தேசிய சம வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.05 கோடி செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

 இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ பல விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. சிம்பன்சி குரங்கு, யானைகள், சிங்கம், சிறுத்தை, மயில், டயனோசர் என ஏராளமான விலங்குகளின் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. புல் தரை, வண்ண நீரூற்றுகள், வாத்துகள் நீந்தி மகிழும் சிறிய தடாகம், வயதானவர்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை, குடும்பத்துடன் அமர்ந்து பேச இருக்கைகள், பூங்காவின் அழகை இரவிலும் வெளிக்காட்டும் விளக்குகள், தண்ணீர் தேவைகளுக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி, கழிப்பறைகள், 4 சூரிய மின் விளக்குகள் என சகல வசதிகளும் உண்டு.

 ஆனால், இவை அனைத்தும் பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்தும், பொலிவிழந்தும் காணப்படுகின்றன. புல் தரைகள் காய்ந்து கிடக்கின்றன. வண்ண நீரூற்றுகள் செயலிழந்து கிடக்கின்றன. பல இடங்களில் முள் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

 இதுகுறித்து நகராட்சி பூங்கா உள்ள 3-வது வார்டு கவுன்சிலர் தனசேகர் கூறுகையில், இப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்ரீ அருள்மிகு திருவேட்டை அய்யனார் மகளிர் சுயஉதவிக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். பூங்காவில் முக்கியமான இடங்களில் ரூ.12 ஆயிரம் செலவில் பல்புகள் வாங்கி பொருத்தப்பட்டுள்ளன. கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறுவர்கள் விளையாட டிராகன் ரயில், சிறிய ராட்டினம் ஆகியவை தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. கழிப்பறைகள் பயன்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தப்பட்டு, தண்ணீர் இணைப்புகள் சீர்படுத்தப்பட்டுள்ளன.

 விரைவில் புதிய புல்தரை அமைக்கப்படும். ஸ்பிரிங்க்லர்களை அமைத்து தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சிறிய தடாகத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு புதிதாகத் தண்ணீர் நிரப்பி வாத்துகள் உள்ளிட்ட நீர்ப் பறவைகளை விடுவோம். அனைத்து விலங்குகளின் சிலைகளுக்கும் புதிதாக வண்ணம் தீட்டப்படவுள்ளது.

 சிறுவர்கள் விளையாடும் சறுக்கு மரம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொட்டி யாருக்கும் காயம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 4 வண்ண நீரூற்றுகளில் ஒன்று சீரமைக்கப்பட்டுள்ளது. மற்றவற்றையும் விரைவில் சீரமைக்க உள்ளோம். சூரிய மின் விளக்குகளில் உள்ள பேட்டரிகள் திருடப்பட்டுவிட்டன. எனவே விரைவில் புதிய பாட்டரிகளை வாங்கி பொருத்தி அவற்றையும் இயங்கச் செய்வோம்.

 மதுரையில் நடக்கும் சித்திரைக் கண்காட்சிபோல இங்கும் நடத்த விருப்பம். மாலை வேளையில் புரொஜெக்டர் மூலம் அரசு அனுமதித்த திரைப்படங்கள், செய்திப் படங்களை திரையிடவும் எண்ணியுள்ளோம். இதற்காக நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

 நகராட்சித் தலைவர் அர்ச்சுணனிடம் இதுகுறித்து கேட்டபோது, உடைக்கப்பட்ட தண்ணீர் பைப்புகளை மாற்றவும், மணல் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் தேவைக்கு ஆழ்துளைக் கிணறுகளை சீர்படுத்தவும், புதிதாக அமைக்கவும், மோட்டார் பம்ப் வாங்கவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். பூங்காவுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டுள்ளோம். அது முடிந்ததும் அதற்கான நிதியை பெற்று பூங்காவை புதுப்பொலிவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →