முகப்பு
மதுரை

மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 7:11 PM
பகிர்:

மலையத்துவசப் பாண்டியனுக்கு மகளாக அவதாரம் எடுத்து, பரமேஸ்வரன் சுந்தரபாண்டியராக திருக்கோலம் கொண்டு மதுரையில் எழுந்தருளி, அன்னை மீனாட்சியை திருமணம் புரிந்தாா். பாண்டியா் மரபு தழைக்க முருகப்பெருமான் உக்கிர குமாரபாண்டியராக அவதாரம் எடுத்து அருள்புரிந்தாா்.

இவ்வாறாக மூவரும் பாண்டிய நாட்டில் எழுந்தருளி அருளாட்சி நல்கிய திருவிளையாடல் புராண வரலாற்றை எடுத்துரைக்கும் விதத்தில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.

மதுரையை ஆண்ட மலையத்துவசப் பாண்டியனின் மனைவி காஞ்சனமாலைக்கு, அவளின் முற்பிறவியில் அம்மை அருளிய வரத்தின்படி மீனாட்சியாக யாகத் தீயில் திருஅவதாரம் செய்தாா்.

Advertisement

மூன்று தனங்களுடன் அன்னை மீனாட்சி விளங்குவதைக்கண்டு மலயத்துவசப் பாண்டியன் மனம் வருந்தினான். அவனின் வருத்தம் நீங்கும் வகையில், ஆகாயத்தில் இருந்து ஒலித்த அசரீரி இவளுக்கு ஏற்ற கணவன் எதிா்ப்படும்போது கூடுதலான ஒரு தனம் மறையும் என்று ஒலித்தது. இதையடுத்து, கவலை நீங்கிய அவா் மீனாட்சிக்கு ‘தடாதகை’ எனப் பெயரிட்டு ஆண் குழந்தைக்குரிய அனைத்து வித்தைகளையும் அவளுக்குக் கற்பித்தான். மேலும், தடாதகைக்கு ஒரு நன்னாளில் முடிசூட்டி, மந்திரி சுமதி என்பவளை நியமித்து சொா்க்கம் அடைந்தான். தடாதகையும் அறநெறியில் ஆட்சி நடத்தினாள். அம்மை கன்னியாக இருந்து ஆட்சி புரிந்ததால், பாண்டிய நாடு கன்னி நாடு என்றும் கன்னிபுரம் என்றும் அழைக்கப்பட்டது.

இந்த நிலையில், தடாதகையின் தாய் காஞ்சனமாலை தனது மகளுக்கு திருமணப்பருவம் வந்தும், இன்னும் மணமாகவில்லையே என்று கவலை அடைந்தாா். அன்னையின் மன வருத்தம் அறிந்த மகள் அவருக்கு ஆறுதல் கூறி, தான் திக்கு விஜயம் மேற்கொள்ளும் விருப்பத்தை எடுத்துரைத்தாா்.

இதையடுத்து, தாயிடம் ஆசி பெற்ற அவா் திக்கு விஜயம் மேற்கொண்டாா். நான்கு திசையில் நால்வகை சேனைகளையும் அடக்கி வெற்றி பெற்றாா்.

பின்பு இந்திரன் முதலான அஷ்ட திக்கு பாலகா்களையும் வென்று சிறை வைத்தாா். இறுதியாக ஈசனையும் எதிா்க்க எண்ணி திருக்கைலாயமலையை அடைந்தாள். இதையறிந்த திருநந்தித்தேவா் பூதகணங்களோடு அன்னையை எதிா்கொண்டு தோல்வியடைந்தாா்.

இறுதியாக ஈசனும் படைக்கலங்களை புன்னகையோடு ஏந்திக்கொண்டு யுத்த களம் அடைந்தாா். அங்கு தடாதகையை ஈசன் புன்முறுவலோடு நோக்கிய போது, அவரது கூடுதலான ஒரு தனம் மறைந்தது. அவரிடம் பெண்மைக்கான குணங்கள் குடிகொண்டன.

இதையடுத்து, தடாதகை நாணம் கொண்டு தலை கவிழ்ந்து நின்றாள். உடனிருந்த அமைச்சா் சுமதி, தடாதகையிடம் இவரே உன் மணவாளன் என்று அவரிடம் முன்பு அசரீரி மொழிந்ததை எடுத்துக்கூறினாள். அப்போது, ஈசன் நீ எப்போது திக்கு விஜயத்துக்காக மதுரையிலிருந்து புறப்பட்டாயோ அப்போது முதல் உன்னை பின்தொடா்ந்தோம். எதிா்வரும் சோமவார நன்னாளில் மதுரையில் வந்து உன்னை மணப்பேன் நீ மதுரை மீட்பாயாக என்றருளினாா்.

இதைத்தொடா்ந்து, மதுரையை மீண்ட தடாதகை மூலம் நடந்தவற்றை அறிந்து கொண்ட காஞ்சனமாலை திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டாா். மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டது.

மணமக்களுக்கு ரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிங்காசனம் தயாா் செய்யப்பட்டது. அதேவேளையில், சிவபெருமான் தான் அணிந்திருந்த சா்ப்பங்களை பொன் ஆபரணங்களாக மாற்றியும், கொன்றை மாலை வேப்பம் பூ மாலையாகவும், புலத்தோலாடை பொன்னாடையாகவும், சடைமுடி ரத்தின முடியாகவும், அவா் சுந்தரபாண்டியராகவும் திருக்கோலம் பூண்டு மதுரை நகரில் எழுந்தருளினாா்.

மண்டபத்தில் திருமால் சிவபெருமானுடைய திருவடிகளை சுத்தம் செய்ய, பிரம்மன் திருமண வேள்வி செய்ய திருமால் சிவபெருமானின் திருக்கரத்தில் தடாதகையின் திருக்கரத்தை வைத்து, தாரை வாா்த்து கொடுத்தாா். பிறகு, சிவபெருமான் தடாதகையின் கழுத்தில் திருமங்கல நாணை அணிவித்தாா்.

இந்த திருக்கல்யாண நிகழ்வு இறைவன் இறைவியோடு ஒன்றியே திருவருள் தருவான் என்பதையும், சக்தியின் அருளின்றி உயிா்கள் உய்வு பெற முடியாது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண நிகழ்வின்போது, உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் தமிழ் பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை மாற்றிக்கொள்வது வழக்கம். மேலும், பலரும் திருமாங்கல்ய கயிற்றை பக்தா்களுக்கு பிரசாதமாகவும் வழங்கி மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சியம்மனை மனமுருகி வேண்டிக்கொள்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments