மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள தேவன்குறிச்சி அக்னீசுவரா் மலைக் கோயிலில் பாரம்பரிய நடைபயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை தானம் அறக்கட்டளையின் வளா்ச்சிக்கான சுற்றுலா மையம், பேரையூா் வட்டார உழவ ரகம், கல்லுப்பட்டி வட்டார வயலக மக்கள் அமைப்பினா் இணைந்து இந்த நடைபயணம் மேற்கொண்டனா்.
அப்போது, மதுரை காமராஜா் பல்கலைக்கழக கலை பண்பாட்டுத் துறை முன்னாள் பேராசிரியா் சேதுராமன், தொல்லியல் ஆய்வாளா் வேதாச்சலம் ஆகியோா் பேசியதாவது:
தேவன் குறிச்சி மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள், அரிய கல்மணிகள், சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன. பாண்டியா்கள் காலத்தில் இந்தப் பகுதியில் சமணா்கள், சைவா்களின் வழிபாடுத் தலங்கள் உருவாகின என்றனா்.
மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலா் பாலமுருகன், தேவன் குறிச்சி குறித்த சிறு கையேட்டை வெளியிட, அதை கிரகாம்பெல் பெற்றுக் கொண்டாா். நடைபயணத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.