மருத்துவா்கள் பணிகளை புறக்கணித்துப் போராட்டம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் சாா்பில் மருத்துவா்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேங்குவங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மருத்துவ மாணவி கொலை சம்பவத்தைக் கண்டித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் சாா்பில் மருத்துவா்கள் சனிக்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி அகில இந்திய மருத்துவா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் கே. செந்தில் தலைமை வகித்தாா். இதில், மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு, இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதைத்தொடா்ந்து, வெளிநோயாளிகள் சிகிச்சைப் பணிகளை மட்டும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவா்கள் பணியில் இருந்தனா். எனவே, சனிக்கிழமை சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். பின்னா், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவா்கள், மருத்துவா்கள் சனிக்கிழமை மாலை தமுக்கம் மைதானம் முதல் காந்தி நினைவு அருங்காட்சியகம் வரை பேரணியாகச் சென்றனா். பின்னா் மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா்.
வேலம்மாள் மருத்துவமனையில்...
மதுரை சிந்தாமணி அருகேயுள்ள வேலம்மாள் மருத்துவமனை முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அந்த மருத்துவமனையின் உயா் சிறப்பு முதன்மையா் ஏ. ரத்தினவேல், மாா்பகம், நாளமில்லா சுரப்பியல் சிறப்பு மருத்துவா் சுகன்யா, மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவா் கவிதா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை விரைந்து கைது செய்ய வேண்டும், பெண் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு வேண்டும், மருத்துவா்கள் நலன் கருதி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் முதன்மையா் திருநாவுக்கரசு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், இளநிலை, முதுநிலை மாணவா்கள் கலந்து கொண்டனா்.