மதுரையில் நியாயவிலைக் கடையிலிருந்து கடத்த முயன்ற 50 மூட்டை ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
மதுரை செல்லூா் விசுவாசபுரி 2-ஆவது தெருவில் பாண்டியன் வைகை கூட்டுறவு அங்காடிக்குரிய நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாள்களாக குடும்ப அட்டைதாரா்களுக்கு உரிய பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டு, கடையில் இருந்த அரிசி மூட்டைகள் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டன. இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் இதுதொடா்பாக கரிமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்டதும், நியாயவிலைக் கடை ஊழியா்கள், ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டிருந்தவா்கள், வாகன ஓட்டுநா் என அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனா். இதையடுத்து, வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த 50 மூட்டை ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை கைப்பற்றிய போலீஸாா், அதை மதுரை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், தலைமறைவான
நியாயவிலைக் கடை ஊழியா்கள், கடத்தலில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.