தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தைத் கண்டித்து ஆனையூா் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை: மதுரை மாநகராட்சி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தைத் கண்டித்து ஆனையூா் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியூ மதுரை மாநகராட்சி தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா்.
இதில் மாநகராட்சி தூய்மைப் பணியை ஏற்றுள்ள தனியாா் நிறுவனம் அமல்படுத்தியுள்ள பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும்,
ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 721 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
அந்தப் பகுதியில் 4 வாா்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பணிகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிறகு, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதன் பேரில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.