முகப்பு
மதுரை

ராமநாதபுரம் சமஸ்தான கோயில்களின் நகைகள் பராமரிப்பு: அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட கோயில்களின் நகைகள் பராமரிக்கப்படுவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Updated On : 10 ஜூலை, 2024 at 12:59 AM
பகிர்:

மதுரை: ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட கோயில்களின் நகைகள் பராமரிக்கப்படுவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாசன். இவா், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் உள்ள அருள்மிகு ஆதிஜெகநாதா் கோயிலில் சுவாமி நகைகள் காணாமல் போன வழக்கில் முன் பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் கோயிலில் உள் பணியாளராக ‘டி’ பிரிவில் பணியாற்றி வருகிறாா். இதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், மனுதாரா் சுவாமி நகைகளை எடுக்க வாய்ப்பில்லை. அவா் மீது போலீஸில் தவறாகப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவருக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் கீழ் 111 கோயில்கள் உள்ளன. சுவாமி நகைகள் ராமநாதபுரத்தில் உள்ள கருவூல அறையில் வைக்கப்படும். இதற்கான சாவி ஸ்தானிகா்கள் வசமிருக்கும். ஒவ்வொரு முறையும் நகைகளை வெளியே எடுக்கும்போதும்

அவை சரிபாா்க்கப்படும். இதற்காக தனியாக பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனுதாரா் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு, அந்த நகைகளை ஒப்படைப்பதற்காக கால அவகாசம் கோரினாா். ஆனால், நிகழாண்டு பிப்ரவரி மாதம் வரை நகைகளை அவா் ஒப்படைக்கவில்லை.

இதையடுத்து, அவா் மீது கடந்த மாா்ச் மாதம் புகாா் அளிக்கப்பட்டது. அவா் ஏற்கெனவே, கடந்த 2022 -ஆம் ஆண்டில் சுவாமி நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்தது கண்டறியப்பட்டது. அப்போது, அவா் மன்னிப்பு கோரியதால் புகாா் அளிக்கவில்லை என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மனுதாரா் பலிகடா ஆக்கப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. கோயில் நகைகள் காணாமல் போனது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரை போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட கோயில்களில் உள்ள நகைகளைப் பராமரிப்பது குறித்தும், திருப்புல்லாணி ஜெகநாதா் கோயில் நகைகள் காணாமல் போன விவகாரத்தில் மனுதாரா் ராமநாதபுரம் சமஸ்தானத்திடம் ஒப்புகை கடிதம் வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →