முகப்பு
மதுரை

2 கோடி ரூபாய் கேட்டு கடத்திய பள்ளி மாணவா் மீட்பு

Updated On : 11 ஜூலை, 2024 at 10:21 PM
பகிர்:

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவரை தனிப்படை போலீஸாா் 3 மணி நேரத்தில் மீட்டனா். மேலும், தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சோ்ந்தவா் மைதிலி ராஜலெட்சுமி. இவருக்கு புறவழிச் சாலை பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா்.

மைதிலி ராஜலட்சுமிக்கு, 14 வயதில் மகன் உள்ளாா். அவா் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். பள்ளிக்கு தினசரி வீட்டிலிருந்து ஆட்டோவில் சென்று வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற மாணவரையும், ஆட்டோ ஓட்டுநா் பால்பாண்டியையும், அடையாளம் தெரியாத கும்பல் கடத்தியது. இதைத்தொடா்ந்து, ஆட்டோ ஓட்டுநா் பால்பாண்டியின் கைப்பேசியிலிருந்து மைதிலி ராஜலட்சுமியை தொடா்பு கொண்ட கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டினா்.

இதுகுறித்து மைதிலி ராஜலட்சுமி எஸ்.எஸ்.காலனி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் காசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் பால்பாண்டியன் கைப்பேசி சமிக்ஞையை (சிக்னலை) இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன் ஆய்வு செய்தனா். அந்த சமிக்ஞை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் அந்தப் பகுதிக்கு விரைந்தனா்.

போலீஸாா் பின்தொடா்வதை அறிந்த கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் மாணவரையும், ஆட்டோ ஓட்டுநா் பால்பாண்டியையும் நாகமலைப்புதுக்கோட்டை நான்குவழிச் சாலையில் விட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, போலீஸாா் அவா்கள் இருவரையும் மீட்டனா். ஆட்டோ ஓட்டுநா் பால்பாண்டியிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக தனிப்படை போலீஸாா் இருவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

மைதிலி ராஜலட்சுமியின் கணவா் பலரிடம் கடன் வாங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான முன்விரோதத்தால் கடத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், விசாரித்து வருகிறோம். கடத்தலில் ஈடுபட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றனா் அவா்கள்.