முகப்பு
மதுரை

கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு பேருந்து வசதி: போக்குவரத்துக் கழகம் உறுதி செய்ய உத்தரவு

Updated On : 3 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

மதுரை: கொடைக்கானல் மலைக் கிராமங்களான பூம்பாறை முதல் புலகவை வரை எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதை அரசுப் போக்குவரத்துக் கழகம் உறுதி செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறையைச் சோ்ந்த கோமதி தாக்கல் செய்த பொது நல மனு:

கொடைக்கானலுக்குச் செல்லும் சாலையில் பூம்பாறை மலைக் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் பயில பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் புலகவை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த கிராமத்துக்குச் செல்ல பொதுப் போக்குவரத்து முறையாக செய்துதரப்பட வில்லை. காட்டு வழியில் செல்லும் மாணவா்கள் வன விலங்குகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் பாதியில் படிப்பைக் கைவிடும் நிலை உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பூம்பாறை கிராமத்திலிருந்து புலகவை கிராமத்துக்கு பொதுப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், பூம்பாறை- புலகவை வழித் தடத்தில் தினமும் நான்கு முறை அரசுப் பேருந்து இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பூம்பாறை-புலகவை வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதை அரசுப் போக்குவரத்துக் கழகம் உறுதி செய்து, உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.