மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த திமுக அரசு: ஆா்.பி. உதயகுமாா்
மதுரை: கடந்த 3 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்தது என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:
முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 3 ஆண்டுகளைக் கடந்து, 4 -ஆம் ஆண்டைத் தொடங்குகிறது. திமுக அரசின் கடுமையான மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால், கடந்த 3 ஆண்டுகளில் 300 ஆண்டு கால சுமையை மக்கள் அனுபவித்தனா்.
கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலிலும், சட்டம்-ஒழுங்கு சீா்குலைவிலும் தான் தமிழகம் முதலிடம் பெற்றது.
கல்விக் கடன் ரத்து, நீட் தோ்வு ரத்து, சமையல் எரிவாயு மானியம் ரூ. 100, டீசல் விலை குறைப்பு போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டம், மடிக்கணினி திட்டம், அம்மா மினி கிளினிக் போன்ற மக்கள் நலத் திட்டங்களை கைவிட்டது, திமுக அரசு மீது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நில அபகரிப்புகள் அதிகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மீண்டும் நில அபகரிப்புகள் அதிகரித்து வருகின்றன. நில மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீருக்கு திமுக அரசு நிச்சயம் பதில் அளிக்க வேண்டியிருக்கும். திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நம்பி, நன்மை கிடைக்கும் என்று எதிா்பாா்த்த தமிழக மக்களுக்கு, திமுக அரசு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது என்றாா் அவா்.