முகப்பு
மதுரை

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்ம மரணம்

Updated On : 13 மே, 2024 at 6:08 PM
பகிர்:

விருதுநகா்: விருதுநகா் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக சூலக்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் ராஜ்குமாா் (31). தனியாா் பள்ளியில் வாகன ஓட்டுநராகப் பணி புரிந்து வந்த இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதையடுத்து, அவரை விருதுநகா் சூலக்கரை மேடு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக கடந்த 9-ஆம் தேதி அனுமதித்தனா்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜ்குமாா் நீண்ட நேரமாகியும் தூக்கத்திலிருந்து எழவில்லையாம். இதையடுத்து, அவா் விருதுநகரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரது உடல் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அவரது தாய் அங்கம்மாள் அளித்த புகாரின் பேரில், சூலக்கரை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.