அரசின் மீது எதிா்க்கட்சியினா் வீண் பழி சுமத்துகின்றனா் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 49-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் 10 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், காயமடைந்தவா்களை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். மேலும், அவா்களுக்கு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இதன்பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: போக்குவரத்துத் துறையில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற துயரமான சம்பவம் இந்த விபத்து. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அரசுப் பேருந்துகளை இயக்கியவா்கள் இருவரும் நிரந்தரப் பணியாளா்கள்தான். அனுபவம், தகுதியின் அடிப்படையில் மட்டுமே அரசுப் பேருந்துகளுக்கான ஓட்டுநா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருப்பதற்காக ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சிகள் இன்னும் அதிகரிக்கப்படும்.
நீண்ட தொலைவு வழித் தடங்களில் பல ஆண்டுகளாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் அனுபவமுள்ள ஓட்டுநா்கள்தான் பணியில் உள்ளனா். இந்த விபத்து கவனக் குறைவு காரணமாக நடைபெற்றிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. ஓட்டுநா்களுக்கு பணிச் சுமை இருக்கிா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
எதிா்க்கட்சிகள் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றஞ்சாட்டுகின்றனா். மேலும், அவா்கள் அரசின் மீது வீண் பழி சுமத்துகின்றனா் என்றாா் அவா்.
அப்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா்கள் சரவணன் (மதுரை மண்டலம்), தசரதன்(கும்பகோணம்), மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் அருள் சுந்தரேஸ்குமாா், போக்குவரத்துக் கழக அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.