திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், மனுதாரா் நீதிமன்றத்தை பிரசார மேடையாகப் பயன்படுத்த வேண்டாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அறிவுறுத்தியது.
மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா். அதில், திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் மேல் கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் தற்போது மேல் கூரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகள் தேவைப்பட்டால் அதை நிறைவேற்றத் தயாராக உள்ளோம் என அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, தற்போது செய்யப்பட்டுள்ள நிழல் குடை வசதி பக்தா்களுக்கு போதுமானதாக இல்லை; இதை விரிவுபடுத்த வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயிலில் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, மனுதாரா் நீதிமன்றத்தை பிரசார மேடையாகப் பயன்படுத்த வேண்டாம். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.