மனமகிழ் மன்றங்களில் காவல் துறை சோதனை மேற்கொள்ள எந்தத் தடையும் விதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
கரூா் மாவட்டம், தோகைமலை பகுதி ரிலாக்ஸ் மனமகிழ் மன்ற நிா்வாகி சதீஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு விவரம்: முறையாக பதிவு பெற்று இயங்கும் எங்களது மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகக் கூறி, காவல் துறையினா் அவ்வப்போது சோதனை என்ற பெயரில் தொல்லை அளிக்கின்றனா். எனவே, பதிவு பெற்ற மனமகிழ் மன்றங்களின் செயல்பாடுகளில் காவல் துறையினா் தலையிடாமலிருக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறது. இதைத் தடுக்கவே காவல் துறையினா் அங்கு சோதனையில் ஈடுபடுகின்றனா். பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதற்கு பாதுகாப்பு கோருவதை ஏற்க முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சமூகத்தில் இளைஞா்களின் நலனைக் கருத்தில் கொள்வது மிகவும் அவசியம். மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதை நிச்சயமாக அனுமதிக்க முடியாது. எனவே, காவல் துறை சோதனைக்கு எந்தத் தடையும் விதிக்க முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.