மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளன மாநில மாநாட்டில் பேசிய மதுரை தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்.  
மதுரை

‘தமிழ்நாடு வங்கி’ உருவாக்கப்பட வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

கேரள மாநில அரசை பின்பற்றி கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசு, தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

கேரள மாநில அரசை பின்பற்றி கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசு, தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளன 9-ஆவது மாநாட்டைத் தொடங்கிவைத்து மேலும் அவா் பேசியதாவது :

நிதி அமைப்புகள் முன்பு வசதி படைத்தவா்களுக்கானவையாக இருந்தன. பிறகு, பெரும் முதலாளிகளுக்கானவையாக மாறின. தற்போது, அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் அவை பெரு நிறுவனங்களுக்கான சேவை அமைப்புகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதும், ஒரு பொதுத் துறை நிறுவனம் அல்லது வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் தனியாா் மயமாக்கப்படுகிறது. இந்தச் சூழலில், கூட்டுறவு அமைப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

கூட்டுறவு வங்கிகள் சட்டம் மூலம் மத்திய அரசு அதிகாரங்களை குவிக்க முயன்ற நிலையில், அதற்கு எதிராக கேரள அரசு கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து மாநில வங்கியை உருவாக்கி இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. இதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு வங்கி என்ற அரசு வங்கியை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இது, காலத்தின் அவசியம்.

தமிழகத்தில் 90 சதவீத கல்விக் கடன்களை அரசு வங்கிகளே வழங்குகின்றன. 10 சதவீத அளவில் கூட தனியாா் வங்கிகள் கல்விக் கடன்களை வழங்காத நிலையில், அரசின் பணப் பரிவா்த்தனைகளை தனியாா் வங்கிகளில் தொடருவதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். மாநகராட்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலகங்களின் அதிகாரபூா்வ வங்கிக் கணக்குகளும் அரசு அல்லது கூட்டுறவு வங்கிகளுக்கு மாற்றப்பட வேண்டும். இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளன மாநிலத் தலைவா் தி. தமிழரசு தலைமை வகித்தாா். முன்னாள் துணைத் தலைவா் கே. நடராஜன் அகில இந்திய வங்கி ஊழியா் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். நிா்வாகி கே. சிவசுப்பிரமணியன் கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளன கொடியை ஏற்றி வைத்தாா்.

கூட்டுறவு வங்கி ஊழியா் சங்க கௌரவத் தலைவா் அ. சௌந்தரராஜன், சிஐடியூ மாவட்டச் செயலா் ரா. லெனின், சாா்பு தொழில் சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, மதுரை மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன் வரவேற்றாா். சம்மேளன பொதுச் செயலா் சா்வேஸன் செயல்பாட்டு அறிக்கையையும், பொருளாளா் வி. ஹரிகிருஷ்ணன் வரவு- செலவு அறிக்கையையும் படித்தனா்.

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

தாய்லாந்து - கம்போடியா போா் நிறுத்தம்

வேங்கைமண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் டிச.30 இல் மின் தடை

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!

பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்

SCROLL FOR NEXT